அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நடந்த கொள்ளையில் திருடப்பட்ட நகைகள் அனைத்து மீட்கப்பட்டது என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் மீட்பு
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில், கடந்த 13ம் தேதி ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மொத்தம் 481 வாடிக்கையாளர்களின், 31 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரும்பாக்கம் காவல்நிலையத்தில், சென்னை மாநகர வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு செய்தியாளர் சந்தித்தார், அப்போது, பெடரல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டதாக கூறினார். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரிந்தும் அதை மறைத்த குற்றத்திற்காக காவல் ஆய்வாளர் அமல்ராஜ், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். பெடரல் வங்கி கொள்ளையில், அதன் ஊழியரே ஈடுபட்டுள்ளதால், ஒவ்வொரு வங்கியும் தங்களது ஊழியர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும், நகைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியதாகவும் கூறினார்.

