மகளிருக்கான ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட இந்திய அணியின் தோல்வி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நியூஸிலாந்துடனான தோல்விக்கு பிறகு வெஸ்ட் இண்டிஸ் அணியோடு இன்று களம் கண்ட இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்திலிருந்தே அடித்து விளையாடிய இந்திய வீரர்கள் 50 ஓவர்களின் முடிவில் 317 ரன்கள் குவித்தனர்.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்ம்ரிதி மந்தனா 123 ரன்களும், ஹர்மன்ப்ரீட் கவுர் 109 ரன்களும் விளாசினார்கள். 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்ய தொடங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு தொடக்கம் நன்றாகவே அமைந்தது.12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை நெருங்கியது.
ஸ்நேஹ ராணா முதல் விக்கெட்டை எடுத்து இந்தியாவிற்கு பிரேக் கொடுக்க,அடுத்தடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 162 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். இதையடுத்து சுமார் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
123 ரன்கள் விளாசிய இந்திய அணியின் ஸ்ம்ரிதி மந்தனா சிறந்த ஆட்டக்காரர் விருதை பெற்றார். தோல்வி பாதையிலிருந்து வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள இந்திய அணி வரும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்படும் என நம்பலாம்.