Editor's Picksதமிழ்நாடு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்து ; மன்னிப்பு கேட்க தயார் – எஸ்.வி சேகர்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவான கருத்துக்களை தெரிவித்ததற்காக தாம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக முன்னரே சமூக வலைத்தளத்தில் தாம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தனது தரப்பு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் நடிகரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான எஸ்.வி சேகர்.

தமிழக ஆளுநராக முன்னர் பொறுப்பு வகித்த பன்வாரிலால் புரோகித், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தை தட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையாக அந்த பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கோரினார் பன்வாரிலால் புரோகித்.

அப்போது, இந்த நிகழ்வு குறித்து தனது சமூக வலைத்தள பக்கம் வாயிலாக, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள்,  பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்துவதாக கூறி புகார்கள் கிளம்ப, எஸ்.வி சேகர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவான கருத்துக்களை தெரிவித்ததற்காக தனது கட்சிக்காரர் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாகவும், முன்னரே சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தனது கட்சிக்காரர் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் நடிகர் எஸ்.வி சேகரின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதனை தொடர்ந்து மேற்கண்ட வழக்கானது 2 வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.