கடலூரில் கபடி போட்டியின் போது வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபடி வீரர் மரணம்
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (21). கபடி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (bsc) 2ம்ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்றும் வருகிறார். நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக சுயநினைவில்லாமல் கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர்,சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

