அரசியல்இந்தியாசமூகம்

வெளியாகும் ‘Ambedkar & Modi’ புத்தகம்… சர்ச்சையை கிளப்பும் இளையராஜாவின் முன்னுரை!

அம்பேத்கரையும் – பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அன்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பேசு பொருளாகியுள்ளன.

முன்னுரையில் மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சமூக வலையதளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இயக்குநர் மாரி செல்வராஜ் போன்றோர் இளையராஜாவின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மறுபக்கம் பாஜகவினர் இளையராஜாவின் கருத்தை பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜாவின் முன்னுரையை பாராட்டி இருக்கிறார். அவர் தனது பதிவில், ‘பாபாசாகேப் அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு புளூகிராஃப்ட் டிஜிட்டல் அறக்கட்டளையின் ‘Ambedkar & Modi – Reformer’s Ideas, Performer’s Implementation’ என்ற புத்தகத்திற்கு சிறப்பான முன்னுரை எழுதியுள்ளார் பண்ணைப்புரத்து மாமனிதன் இசைஞானி திரு.இளையராஜா அவர்கள். வாழ்த்துகள்.’ எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி இயக்கி இருக்கும் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் முதல்முறையாக இணைந்து இசையமைத்து இருக்கின்றனர். இதனை பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் முன்னுரையில் கூறியிருப்பது:

“நதி நீர் பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன். 2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அம்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை வெளிபடுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது.

‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு பாதைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் மூலமாக சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி இருக்கிறார். வீடுகள், கழிப்பறைகள் கட்டிக்கொடுத்ததுடன் ஏழைகளின் வாழ்க்கையையும் முன்னேற்றி இருக்கிறார்.

பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும். இலவச எரிவாயு திட்டம், பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும், முத்தலாக் சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.

அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டு, செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது.

பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்களின் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது. நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்” என இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

Related posts