இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜோ ரூட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தலைசிறந்த கேப்டன்
மார்டன் டே கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களாக அறியப்படுபவர்களில் ஒருவர் ஜோ ரூட். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத வீரர். 2017இல் அலஸ்டைர் குக், டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு இங்கிலாந்து அணியை மகத்தான அணியாக மாற்றியதில் ஜோ ரூட்டிற்கு முக்கியப் பங்கு உள்ளது. இவர் தலைமையில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 27 வெற்றியையும், 26 தோல்வியையும், 11 போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 5,295 ரன்களை குவித்துள்ளார் ஜோ ரூட். உலக அளவில் ஸ்மித், ஆலன் பார்டர், பாண்டிங் மற்றும் விராட் கோலியை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் அதிக ரன் குவித்த டெஸ்ட் கேப்டனாக உள்ளார்.
தொடர் தோல்வி
சமீப காலமாக இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடர்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க தொடரான “ஆஷிஷ்” கிரிக்கெட் தொடரில் 5 – 0 என்ற கணக்கில் மோசமான தோல்வியை ஆஸ்திரேலியாவிடம் சந்தித்தது. தொடர் தோல்விகளின் காரணமாக, ரூட் தானாக முன்வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.“கடந்த ஐந்து ஆண்டுகளாக அணியின் கேப்டனாக இருந்ததில் மகிழ்ச்சி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து திரும்பிய பிறகு இந்த முடிவை எடுத்தேன். இருந்தாலும் இது குறித்து குடும்பத்தினரிடமும், நெருக்கமானவர்களிடமும் பேசிய பிறகே ஒரு முடிவுக்கு வர முடிந்தது. அனைவருக்கும் நன்றி” என ரூட் கூறியிருக்கிறார்.