இந்தியாசமூகம்

15வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ‘பவாரியா’ கும்பல் தலைவன் சென்னையில் கைது!

காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை 20 வருடங்களுக்கு பிறகு நேற்று தனிப்படை காவல்துறையினர் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவரது வீடு சீலநாயக்கன்பட்டிக்கு அருகே உள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு ஒரு அதிகாலை தாளமுத்து நடராஜன் வீட்டிற்கு வந்த கொள்ளை கும்பல் வீட்டின் காவளாளி கோபாலை கொன்றுவிட்டு வீட்டின் கதவை உடைத்துகொண்டு உள்ளே நுழைந்தது.

தடுக்க முயன்ற தாளமுத்து நடராஜனை துப்பாக்கியால் அடித்து கொலை செய்தது. சம்பவ இடத்திலேயே ரத்தம் சொட்ட சொட்ட தாளமுத்து நடராசன் கொடூரமாக உயிரிழந்தார்.

வீட்டில் இருந்த பல கோடி மதிப்பிலான தங்க நகைள், வெள்ளிகள், பண கட்டுகளை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

லாரி கேங் என்று அழைக்கப்படும் “பவாரியா” என்ற கொள்ளை கும்பல் இதுபோன்ற கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. மேலும், இக்கும்பல் திருவள்ளூர் பெரியபாளையம் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் உட்பட தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் அதிகாரி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை இவர்களை தேடத்தொடங்கியது. கைரேகை அடிப்படையில் இவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்த தேடுதல் வேட்டை நீண்ட நாட்களுக்கு நடந்தது. ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நாட்களில் அவர்களை சுற்றிவளைத்த காவல்துறையினர் ஒருவரை சுட்டுக் கொன்று மற்றவர்களை கைது செய்து தமிழகம் அழைத்து வந்தனர்.

பவாரியா கும்பல் தலைவனான ஓம்பிரகாஷ், அசோக், ராகேஷ் குண்டு, ஜெயில்தார்சிங், பப்லு, பீனாதேவி, சந்து ஆகிய 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பவாரியா கும்பலின் தலைவன் ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ்குண்டு, ஜெயில்தார்சிங் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஓம்பிரகாஷ் சிறையில் இருக்க முடியாமல் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் ஓம்பிரகாஷ் மருமகன் ஜெயில்தார்சிங், மனைவி பீனாதேவி, சகோதரி சந்து மற்றும் பப்லு ஆகியோர் ஜாமினில் வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த கொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வழக்கை விரைந்து முடிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார்.

போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் இன்பார்மர்கள் மூலம் ரகசிய தகவல் கிடைக்க, தேனாம்பேட்டையில் வைத்து ஜெயில்தார்சிங்கை கைது செய்து சேலம் அழைத்து சென்றனர் போலீசார். அவரிடம் துணை ஆணையர் மோகன்ராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் சேலம் 4 ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து இந்த வழக்கு வரும் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்த 15 வருடம் பவாரியா கும்பலின் தலைவனான ஜெயில்தார்சிங் என்ன செய்துகொண்டு இருந்தான் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.