அரசியல்தமிழ்நாடு

GST : விலைவாசி தொடர்ந்து உயர்வு..! பாஜகவின் நிர்வாக திறமையின்மையே காரணம் – சீமான் விமர்சனம் !

இந்தியாவில் தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவதற்கு பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

5 சதவீத வரி உயர்வு

கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் பிரதிநிதிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், எல்இடி விளக்குகள், கத்தி, கிரைண்டர், பொட்டலமிட்டு விற்பனை செய்யப்படும் இறைச்சி, மீன், தயிர், பன்னீர், உலர் பருப்பு வகை காய்கறிகள், கோதுமை, பட்டாணி மாவு, வெல்லம் போன்ற பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

gst council

சீமான்

‘மக்கள் அன்றாட பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு தற்போது அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை எளிய மக்கள் வாழவே முடியாத அளவிற்குச் வரியை உயர்த்தும் பாஜக அரசின் செயல் கண்டனத்திற்குரியது. கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஏற்பட்ட கடுமையான விலை உயர்வால் தொழில்துறையினர், வணிகர்கள், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் ஜிஎஸ்டி வரியை அதிகளவில் உயர்த்துவதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

gst

பொதுமக்கள் பாதிப்பு 

மத்திய அரசின் இத்தகைய ஜிஎஸ்டி வரி விதிப்பானது மாநில அரசுகளின் வரி வருவாயை பறித்து அவற்றின் கடன்சுமை அதிகரிக்க காரணமாகும். தற்போது மீண்டும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கத்தி, பிளேடு, உமிழ் மின்விளக்குகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மீதான வரி உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

நிர்வாகத் திறமையின்மை

மற்ற நாடுகளிலெல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால் உலகளவில் அதிக ஜிஎஸ்டி விதிக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருவது வரி வசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம். எனவே மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் அறிக்கையில் விமர்ச்சித்துள்ளார்.

Related posts