இந்தியாசமூகம்

மத்தியபிரதேசத்தில் மாட்டிறைச்சியால் கொலை! 2 பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பல் அடித்தே கொன்ற பயங்கரம்

மத்தியப்பிரதேசம் போபாலில் பசுவை கொன்றதாக 2 பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பலால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மாட்டிறைச்சிக்கு தடை

இந்தியாவில் பசு பாதுகாக்கப்பட வேண்டும் என பாஜக அரசு மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவந்தது. இச்சட்டத்திற்கு பிறகு மனித உயிர்களை தாக்குவதும், கொடூரமாக அடித்து கொல்லுவதும் தொடர் கதையாகி வருகிறது. மாட்டிறைச்சி தடைக்கு பிறகு இதுபோன்ற கொலைகள் அதிகரித்து உள்ளது.

ஆணவக்கொலை

ஏற்கனவே பழங்குடியினர் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மத்தியப்பிரதேசம் போபாலில் பசுவை அடித்து கொன்றதாக 2 பழங்குடியினரை 20 பேர் கொண்ட கும்பல் சாலைக்கு இழுத்து வந்து பயங்கரமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் 2 பேரும் நிலை குலைந்து போய்விட்டனர். காயமடைந்து உயிருக்கு போராடிய பழங்குடியினரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே  பரிதாபமாக  உயிரிழந்தனர்.

உள்ளூர் வாசிகளின் ஆதங்கம்

சம்பந்தப்பட்ட கொலை கும்பலை போலீசார் தேடி வருகிறது. உயிரிழந்த பழங்குடியினர் வீட்டை சோதனை நடத்தியதில் 12 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்திற்கும் பஜ்ரங் தள அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம் எல் ஏ அர்ஜுன் சிங் ககோடியா நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த வழக்கை உயர் மட்ட விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாஜக வின் மீது அதிருப்தி

இதேபோல அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் மீதான இந்த பயங்கர தாக்குதல் பாஜக மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

 

Related posts