கோவையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருடுவதே முழு நேர தொழிலாக வைத்து அந்த பணத்தில் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர்.
இன்ப சுற்றுலா
கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் ராமு (60) மனைவி நாகம்மாள் (55). இவர்களது மகன் சத்யா (34). சத்யாவிற்கும், நந்தினி (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. குடும்பத்தில் உள்ள அனைவரும் திருடுவதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளனர். பல இடங்களில் பெண்களின் நகைகளை திருடுவதில் நாகம்மாள் படு கில்லாடி. இவர் திருப்பூர், திருச்சி, பாலக்காடு, மதுரை என இவர் பல இடங்களில் நகை பறித்துள்ளார். இவர் மீது பல திருட்டு வழக்குகளும், 5 முறை சிறையும் சென்று வந்துள்ளார். இவர்கள் ஆர்.எஸ்.புரம் பகுதியில் பெண் ஒருவரிடம் 8 பவுன் நகையும், கோனியம்மன் கோயில் விழாவில் 3 பேரிடம் 12 பவுன் தங்க நகை பறித்தனர். இந்நிலையில், இந்த திருட்டு தொடர்பாக தனிப்படை போலீசார் ராமு, நாகம்மாள், சத்யா ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகை, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் செய்யப்பட்ட விசாரணையில், ‘பாப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வைத்திருப்பகாவும், திருடிய நகைகளை உருக்கி விற்பனை செய்து விடுவது வழக்கம் என கூறுகின்றனர். மேலும், கொள்ளையடித்த பணத்தில் மலேசியா, சிங்கப்பூர், சவூதி, துபாய் என பல்வேறு நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று சொகுசாக வாழ்க்கை நடத்தியுள்ளோம்’ என கூறினர்.

