மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் வினாயக் மிதே சென்ற கார் மீது மற்றொரு வாகனம் மோதியதில் அவர் மரணமடைந்து உள்ளார்.
வினாயக் மிதே மரணம்
மராட்டியத்தில் சிவ சங்க்ரம் கட்சி தலைவர் மற்றும் மராட்டிய மேலவையின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் வினாயக் மிதே (52). இவர் அந்த மாநிலத்தில் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர். இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு மும்பை – புனே தேசிய விரைவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ராய்காட் மாவட்டத்தில் மதப் சுரங்க பாதை அருகே, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவரது கார் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு பன்வெல்லில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இச்சம்பவம் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

