75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிறப்பு பதக்கம்
தமிழக காவல் துறையில், மக்கள் சேவையில் திறன்பட செயல்பட்டவர்கள், சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் என 15 நபருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 5 பேரின் பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான காவலருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. இதில் சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கடலூர் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அடையாறு சிறப்பு துணை ஆய்வாளர் சிவராமன், மதுரை போக்குவரத்து சிறப்பு துணை ஆய்வாளர் பழனியாண்டி, செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு துணை ஆய்வாளர் குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட உள்ளன. இந்த விருது பெறுபவர்களுக்கு தங்க பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

