தமிழ்நாடு

அரசின் உதவிகள் தகுதியில்லாத நபர்களை சென்றடைகிறது – அரசின் நோக்கம் அதுவல்ல: பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

மாநில அளவிலான வங்கி பணியாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “குடிமைப் பதிவேட்டில் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ள பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தற்பொழுதும் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. கூட்டுறவு நகைக்கடனில் முறைகேடு நடந்துள்ளது. அரசு தந்த ரூ.4,000 உதவித்தொகை பெற்றவர்களில் பலரும் அதுவரை ரேஷன் கடை பக்கமே வராதவர்கள். இதுபோல், தகுதி இல்லாத பயனாளிகள் அரசு உதவிகளின் பலன்களைப் பெறுவது அரசின் தோல்வி‌” எனக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “நகைக்கடன் திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அனைத்து வழிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. நகைகள் இல்லாத பல கவர்களைப் பார்க்க முடிந்தது. ஒரே குடும்பமே தங்க நகைகளைப் பிரித்து 15 முதல் 20 கூட்டுறவு சங்கங்களில் கடன் அளவிற்கு உட்பட்டு அடமானம் வைத்திருந்தனர். நகைக்கடன் ரத்து திட்டத்தின் நோக்கம் அது அல்ல.

தோல்விகளின் படி நிலைகளில் மிகவும் கீழான தோல்வி, 100 சதவீதம் தகுதி இல்லாத பயனாளிகள் பலன்களைப் பெறுவது. மிக உச்சபட்ச தோல்வி என்பது அரசு கடன் திட்டங்களில் காணப்படுவது போன்ற மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெறுவதாகும். அது குறித்த தகவல்களை தற்போது பதிவு செய்ய முடியாது.

குடிமைப் பதிவேட்டில் இறந்து விட்டதாக பதிவாகியுள்ள பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு தற்பொழுதும் ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. 4,000 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதற்கு முன்பும் பின்பும் ரேஷன் கடைகளில் ஒரு பொருள் கூட வாங்காத லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் நிவாரண நிதி பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற அனைத்தையும் விட மிகப்பெரிய பாவமாக இதனை நான் கருதுகிறேன். ஏனெனில், இதனால் திட்டமிட்ட முறைகேடு செய்பவர்களுக்கும் உள்ளூர் அளவில் முறைகேடு செய்பவர்களுக்கும் மக்கள் பணம் சென்று சேர்கிறது.

சரியான தரவுகளே இனி நமது அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கப் போகின்றன. அந்த அடிப்படையில் உங்களுடன் இணக்கமாக பணியாற்ற வேண்டிய தேவையுள்ளது.

இதனை நான் நிதியமைச்சராக மட்டும் கூறவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராகவும், ஜிஎஸ்டி கவுன்சில் சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையிலும் கூறுகிறேன். கொரோனா, வெள்ளம் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அனைத்து வங்கிகளும் மக்கள் சேவையாற்றின. இதற்கு உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். எனது உலகளாவிய அனுபவங்களின் அடிப்படையில் கூற வேண்டுமெனில் நாம் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது” இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

Related posts