கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்ன என்பதனை மிக எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமா? நமது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஒரு காற்றாலை அல்லது மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு அமைப்பை நமது வீட்டிலேயே உண்டாக்குகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்த அமைப்பை உருவாக்கவும் பராமரிக்கவும் ஆகின்ற செலவானது நாம் பயன்படுத்துகின்ற மின்சாரத்தை அரசாங்கம் உள்ளிட்ட வெளி அமைப்புகளில் இருந்து வாங்கினால் பெறுவதற்கு ஆகின்ற செலவை விட மிக மிக அதிகாமாக இருக்கும்.
இதே ஐடியா தான் கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) உருவாவதற்கும் மிக முக்கிய காரணம். கூகுள் (Google) போன்ற மிகப்பெரிய கம்பெனிகள் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற அமைப்பை உருவாக்குகின்றன. அவை அதிக செயல்திறன் கொண்ட சர்வர்ஸ் (Servers), ஸ்டோரேஜ் (Storage), டேட்டாபேஸ் (database), நெட்வொர்க்கிங் (networking), சாப்ட்வேர் அப்ளிகேஷன் (software application) போன்றவற்றை வழங்குகின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் மிகக்குறைந்த பணத்தை கொடுத்து இன்டர்நெட் (Internet) உதவியுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய கணினி மற்றும் அப்ளிகேஷன் முதலியவற்றினை முன்னேறிய வகையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை குறிக்கின்ற சொல். இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கின்ற எந்தவொரு கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருக்கக்கூடிய ஸ்டோரேஜ் , அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்துக்காக மிகப்பெரிய இடங்களில் கோடிக்கணக்கான எலக்ட்ரானிக் கருவிகளை ஒருங்கிணைத்து அவற்றினை பராமரித்து வருகின்றன.
குறைந்த செலவு :
ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்குரிய பைல்களை சேமித்துவைக்க ஸ்டோரேஜ் இடம் தேவை. அதற்காக அதிக செயல்திறன் கொண்ட கணினி மற்றும் ட்ரைவ்களை வாங்கி 24 மணிநேரமும் ON செய்தே வைத்திருப்பதும் அதற்க்கு பராமரிப்பு வேலை செய்வதும் அதிக செலவு மற்றும் வேலைப்பளுவை ஏற்படுத்தும். அதற்கு நீங்கள் மிகப்பெரிய நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலமாக மிகக்குறைந்த விலையில் தேவையான ஸ்டோரேஜ் ஐ வாங்கிக்கொள்ள முடியும்.
வேகம் :
கோடிக்கணக்கான சர்வர்ஸ், அதிவேக தொழில்நுட்பம், குளிர்சாதன வசதி, பராமரிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருப்பதனால் அதிவேக சேவையினை உங்களால் பெற முடியும்.
செயல்திறன் :
மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையினை வழங்குவதற்காக மிகப்பெரிய டேட்டா சென்டர்களை நிர்வகித்து வருகின்றன. அங்கு தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடுகள் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேரில் செய்யப்படுகின்றன. நீங்கள் தனியாக டேட்டா சென்டர்கள் வைத்திருக்கும் போது இதனை செய்தால் அதிகம் செலவு ஏற்படும். செய்யாவிட்டால் வேகம் உள்ளிட்டவற்றில் குறைபாடு ஏற்படும்.
பாதுகாப்பு :
இணைய பாதுகாப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய நிறுவனங்கள் தாங்களாகவே தங்களுடைய டேட்டா சென்டர்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கும். ஆகையினால் உங்களது தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்கும்.