முன்பெல்லாம் கல்லீரல் பாதிப்பு என்றால் அது மது அருந்துபவர்களுக்கு மட்டுமே வரும் என்ற பொதுவான கருத்து இருந்தது. ஆனால், இன்று மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரலில் கொழுப்பு படிந்து பாதிப்பை ஏற்படுத்தும் ‘ஃபேட்டி லிவர்’ நோய் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. ‘மெட்டபாலிக் டிஸ்ஃபங்க்ஷன்’ (MASLD) என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு, இப்போது இந்தியாவின் மிகப்பெரிய உடல்நலம் சார்ந்த சவாலாக உருவெடுத்துள்ளது.
உலகளாவிய நிலவரமும் இந்தியாவும்: அமெரிக்க மருத்துவ சங்கத்தின் (JAMA) ஆய்வின்படி, உலக மக்கள் தொகையில் 30 முதல் 40 சதவீதம் பேர் இந்த கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 2010 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் சீனா மற்றும் சூடானுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பது கவலைக்குரிய விஷயம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
யாரை அதிகம் தாக்குகிறது? இந்த நோய் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயுடன் நேரடி தொடர்பு கொண்டது. டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களில் 60-70 சதவீதம் பேருக்கும், உடல் பருமன் உள்ளவர்களில் 70-80 சதவீதம் பேருக்கும் இந்த ‘ஃபேட்டி லிவர்’ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாலின அடிப்படையில் பார்த்தால், பெண்களை விட ஆண்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கு 45 முதல் 49 வயதிலும், பெண்களுக்கு 50 முதல் 54 வயதிலும் இந்த பாதிப்பு உச்சத்தை எட்டுகிறது. மேலும், அதிக கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கல்லீரலின் எடையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாகக் கொழுப்பு சேர்வதே இதன் ஆரம்ப நிலை. இது வெறும் கொழுப்பு படிதல் என்பதில் தொடங்கி, கல்லீரல் வீக்கம், தழும்புகள் ஏற்படுதல் என முற்றி, இறுதியில் கல்லீரல் செயலிழப்பு அல்லது புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் ஏற்படும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்புகளில் 30-40 சதவீதம் ஃபேட்டி லிவர் நோயுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்துக் காரணிகள்: உடல் நிறை குறியீடு (BMI) 23-க்கு மேல் இருந்தால் இந்த ஆபத்து அதிகரிக்கிறது. அதேபோல், பெண்களின் இடுப்பு சுற்றளவு 80 செமீ-க்கு அதிகமாகவும், ஆண்களுக்கு 94 செமீ-க்கு அதிகமாகவும் இருப்பது முக்கிய எச்சரிக்கை அறிகுறியாகும்.
தடுக்கும் முறைகளும் தீர்வுகளும்: நல்ல செய்தியாக, இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என கல்லீரல் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு எந்த குறுக்கு வழியும் இல்லை, முறையான வாழ்க்கை முறை மாற்றங்களே தீர்வு என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra-processed foods), சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, வெண்ணெய், நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களைக் குறைக்க வேண்டும்.
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் கடினமான உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
சர்க்கரை சேர்க்காத ‘பிளாக் காபி’ (தினமும் 3 கப் வரை) குடிப்பது கல்லீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஐரோப்பிய மருத்துவ வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.
மிதமான அளவில் கூட மது அருந்துவதைத் தவிர்ப்பது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

