ஓடும் ரயிலில் மது போதையில் இருந்த வடமாநில இளைஞர் ஒருவர் முதன்மை டிக்கெட் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் தன்பாத் – அலப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நாரனின் மகன் ராஜா (35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார். S4 ஸ்லீப்பர் கோச்சில் பயணித்த அவர் ரயில் உள்ளேயே மது அருந்தி உள்ளார். இதைப் பார்த்த ரயில் பயணிகள் பயணச்சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து S4 கோச்சிற்குச் சென்ற டிடிஆர் ஆலன், “ஏன் ரயிலில் அமர்ந்து மது அருந்துகிறாய்?” என்று ராஜாவிடம் கேட்டதோடு, டிக்கெட்டை காட்டுமாறு கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த வட மாநில இளைஞர் டிக்கெட் பரிசோதகரை (TTR) ஆலனை தாக்கியுள்ளார். இதனை அறிந்த முதன்மை டிக்கெட் பரிசோதகரான சென்னை பெரம்பலூர் பகுதியைச் சார்ந்த குடியப்பன் மகன் ஜோதிலிங்கம் (49) சென்று தட்டி கேட்டுள்ளார்.
இருப்பினும் மது போதையில் இருந்த வட மாநில இளைஞர் ராஜா, முதன்மை டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்தை கழிவறையில் வைத்து இரும்பு கொக்கியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது வட மாநில இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து மது போதையில் கீழே குதித்துள்ளார். அவருடன் பயணித்த இரு வட மாநில இளைஞர்களும் தப்பி ஓடியுள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ராஜாவை ரயில்வே ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், டிக்கெட் பரிசோதகருக்கும் வட மாநில இளைஞருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவர்கள் டிக்கெட் பரிசோதகரான ஜோதிலிங்கத்திற்கும் வட மாநில இளைஞர் ராஜாவிற்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வட வடமாநில இளைஞரால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

