அயன் பட பாணியில் கேப்சுல்களை விழுங்கி போதைப்பொருள் கடத்திய உகாண்டா நாட்டை சேர்ந்த 30 வயதான பெண்ணை கோவை போலீசார் கைது செய்தனர்.
அயன் படம்
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள்கள் கடத்தல் பல விதங்களில் நடந்திருக்கிறது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் இத்தகைய செயல்களை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சூர்யா நடித்த அயன் படத்தில் போதை பொருள்கள் பெரிய அளவு கேப்சூல் வாயிலாக வெளி நாட்டிற்கு கடத்தி செல்லப்படும். அதே போல கோவையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
41 கேப்சூல்
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு ஏர் அரேபியா விமானம் வந்து சேர்ந்தது. அங்கிருந்த பயணியர் மற்றும் அவர்களது உடைமைகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆப்ரிக்க நாடான உகாண்டாவை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார். அந்த பெண்ணின் நடக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் போதைப்பொருள் உள்ள 41 கேப்சுல்களை விழுங்கி இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார்.
விசாரணை
புலனாய்வு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சையை தொடர்ந்து அப்பெண் விழுங்கி இருந்த 41 போதை பொருட்கள் மறைத்திருந்த கேப்சூல்கள் வெளியில் எடுக்கப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.