Monday Special

ஏலியன்ஸ் இருப்பது உண்மையா? வேற்றுகிரக வாசிகளை தேடுவதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் என்ன?

1995 ஆம் ஆண்டு மைக்கேல் மேயர் [Michel Mayor] மற்றும் டிடியர் யூலோஸ் [Didier Queloz] இருவரும் பூமி உள்ளிட்ட கோள்கள் சூரியனை சுற்றிவருவதைப்போலவே வேறொரு கோள் இன்னொரு நட்சத்திரத்தை சுற்றிவருவதை கண்டறிந்தனர்.

இதற்காக இவர்களுக்கு இயற்பியல் துறையில் 2019 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்த கல்லொன்றில் பாக்டீரியா இருந்ததாக கூறப்பட்டது.

இந்த கூற்றுகளுக்கு பின்னர் தான் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடலில் வேகம் எடுக்க துவங்கியது.

இதனை ஊக்கப்படுத்தும் விதமான கண்டுபிடிப்பை நாசாவின் கெப்ளர் விண்கலம் நிகழ்த்தியது. அது 2700 புற கிரங்கங்களை கண்டறிந்து கூறியது. ஆனால் இந்த விண்வெளி நாம் நினைப்பதைவிடவும் மிகப்பெரியது.

 

 

நம்மைப்போலவே ஒரு நட்சத்திரத்தை பல கோள்கள் சுற்றிவருவதைப்போன்ற அமைப்புகளும் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது ஏன் இங்கிருப்பதை போன்றதொரு சூழல் அங்கும் இருந்திருக்கக்கூடாது?

ஏன் நம்மை போன்ற அல்லது நம்மை விடவும் அறிவுத்திறன் வாய்ந்த உயிரினம் ஒன்று இருக்கக்கூடாது என்பதே ஏலியன்ஸ் இருக்கலாம் என நம்பப்பட காரணம்.

பூமிக்கு வெளியே ஏலியன்ஸ் எங்கே இருக்கலாம் என்ற கேள்விக்கு பதில் கூறும் விதமான பார்முலா ஒன்றினை 1961 இல் பிரான்சிஸ் ட்ராக்கே கூறினார். ஆனால் அதுவொரு சிக்கலான பார்முலாவாக இருந்தது.

அந்த பார்முலாவிற்கு தேவையான புள்ளிவிவரங்களை சேகரிப்பதே மிகவும் சவாலான காரியம். இதிலிருந்து கிடைக்கும் தகவல் சரியானதாக இருக்கிறதோ இல்லையோ அறிவியலாளர்கள் மத்தியில் ஒருவித ஆர்வத்தை இவரது கோட்பாடு தூண்டியது.

தொழில்நுட்ப சிக்கல்

“செய்வாய் கிரகத்தில் உயிர்களை கண்டறியும் அளவிற்கு இந்த உலகம் இன்னும் தயாராகவில்லை” – இந்த வார்த்தைகளை கூறியவர் நாசாவின் மிக மூத்த விஞ்ஞானி ஜிம் கிரீன் [Jim Green].

அவர் இப்படி கூறியதற்கு மிகமுக்கியக்காரணம், நாம் வெளியுலகில் இருக்கின்ற உயிரினங்களை கண்டறிவதற்கு இன்னும் மிகச்சிறப்பான தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடையவேண்டும் என்பது தான்.

அதற்க்கு நாம் எடுக்கின்ற சிறு சிறு முயற்சிகள் தான், செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்புவது, மிகப்பெரிய தொலைநோக்கிகளை உருவாக்குவது போன்றவை அனைத்துமே.

ஏலியன்ஸ் இருக்க வாய்ப்புகள் குறைவு

ஏலியன்ஸ் இருக்கலாம் என மனிதன் நம்புவதற்கு மிகமுக்கியக்காரணம் ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட மூலக்கூறுகள், வெப்பநிலை, சூழல் இவை இருந்தால் நிச்சயமாக காலப்போக்கில் உயிரினம் தோன்றும் என்பது அறிவியல்.

அப்படிதான் பூமியிலும் உயிரினம் தோன்றின, பரிணாம வளர்ச்சியினால் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் உருவாகின. வளிமண்டலத்தில் நமது சூரிய மண்டலத்தைப்போலவே பில்லியன் கணக்கில் நட்சத்திர மண்டலங்கள் இருக்கின்றன.

ஆகவே அவற்றில் சில மில்லியன் நட்சத்திர குழுமத்திலாவது பூமியைப்போன்று ஒரு நட்சத்திரத்தை கோள்கள் சுற்றிவர வாய்ப்புண்டு. அதைப்போலவே சில கிரகங்களிலாவது நம்மைபோன்றதொரு சூழல்கள் அமையப்பெற்று உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அப்படியொரு சூழல் கொண்ட கோள் உருவாகாமல் கூட இருக்கலாம். அப்படியானால் ஏலியன்ஸ் என்ற ஒன்று இல்லாமல் கூட இருக்கலாம்.

ஏலியன்கள் முன்பே இறந்துவிட்டனவா ?

அண்டவெளியில் இருக்கக்கூடிய சில நட்சத்திர மண்டலங்கள் 11.2 பில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கின்றன. நமது நட்சத்திர மண்டலமோ வெறும் 4.5 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழமையானவை.

ஆகவே இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட விபத்துகளினால் கூட நம்மைபோன்றதொரு அறிவார்ந்த இனம் இருந்திருந்தாலும் அழிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

நம்மிடம் தற்போது இருக்கக்கூடிய விண்வெளி வாகனங்களை வைத்துக்கொண்டு மிகவும் குறைந்த வேகத்திலேயே பயணிக்க முடியும். பல நூறு அல்லது ஆயிரம் ஒளி ஆண்டுகள் தாண்டி இருக்கும் கிரகங்களுக்கு சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்வது கடினம். ஒளி ஒரு ஆண்டு எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அவ்வளவு தூரம் தான் ஒரு ஒளி ஆண்டு.

மனிதர்கள் வடிவமைத்ததிலேயே அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் திறன் வாய்ந்தது நியூ ஹாரிஸான் [New Horizon] தான். ஒருமணி நேரத்தில் 58,500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வல்லது நியூ ஹாரிஸான் செயற்கைகோள். அந்த வேகத்தில் பயணம் செய்தால் கூட ஒரு ஒளி ஆண்டு தூரத்தை கடப்பதற்கு 20,000 ஆண்டுகள் ஆகும்.

இத்தனை சவால்களையும் ஒரே நேரத்தில் நம்மால் கடந்து செல்ல முடியாது. படிப்படியாகத்தான் நாம் செல்லவேண்டி இருக்கிறது. நிச்சயம் ஒருநாள் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை மனித இனம் அடையும். அன்று நம்மைப்போன்ற ஏலியன்ஸ் இந்த பேரண்டத்தில் இருக்கின்றனவா என தெரிந்துவிடும்.

Related posts