சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கம் பறிமுதல்
சென்னை, சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகளவில் கடத்தல் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் விமான நிலையத்தில் வெளியே வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், தாய்லாந்து இருந்து வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த சங்கர் நாகராஜன் (28), ஜமால் முகமது (25), முகமது அலி (30), மும்பையை சேர்ந்த முகமது யூசுப் (30), ஆகிய 4 நபர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர்களை சோதனை செய்தனர். சோதனையில் 4 நபரும் தங்களுடைய உள்ளாடைக்குள் தங்க, வெள்ளி நகைகளை ரகசியமாக மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரிடமும் 95 கிலோ 380 கிராம் வெள்ளி நகைகளும், 343 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 64 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடத்தி வந்த 4 நபரையும் கைது செய்த சுங்கதுறை அதிகாரிகள் அவர்களிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

