அவனியாபுரத்தில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கூறி முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் 30 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் தூய்மை பணியாளராக பணியாற்றுகின்றனர். இங்கு தூய்மை பணி செய்பவர்களுக்கு சரியான சம்பளம் வழங்கப்படுவது இல்லை எனவும் பணி நேரத்தின்போது தேவையான மற்றும் பாதுகாப்பான உபகரணம் பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது இல்லை.
பணியிலிருந்து நீக்கப்பட்ட மூர்த்தியை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை விடுத்து திடீரென அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைவான ஊதியம்
இதேபோல், கடந்த வாரம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி வாசலில் அந்த நகராட்சியை சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து ஊதிய உயர்வுக்காக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவல நிலை
கொரோனா காலங்களிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நிகராக தூய்மை பணியாளர்களும் மக்களின் சுகாதாரத்திற்காக இரவு பகல் பாராது பணியாற்றினார், இப்போதும் நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். கடந்த வாரம் தூய்மை பணியாளர் ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபரணமுமின்றி கழிவுகளை அவரது கையினால் அள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வாழ்வாதாரம்
‘போதிய பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றுவதால் பாதிப்பு எங்களுக்கு மட்டும் இல்லை, எங்கள் குடும்பங்களும் எங்களுடன் சேர்ந்து பாதிக்கின்றன. மேலும் செய்யும் பணிக்கு ஏற்ற ஊதியம் இல்லாததால் எங்களின் குடும்ப வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது’ என மிகவும் வருத்தத்துடன் தூய்மை பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் குறித்து தெரிவிக்கின்றனர்.