இந்தியாவில் கோவிட்-19 இறப்புகள் சரியான அளவைவிட மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அவ்வறிக்கையை மேற்கோள்காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘அறிவியல் பொய் சொல்லவில்லை. மோடி தான்’ என்று மோடி அரசை சாடியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், ‘கோவிட் தொற்றுநோயால் 47 லட்சம் இந்தியர்கள் இறந்துள்ளனர். அரசு கூறுவது போல் 4.8 லட்சம் இல்லை. அன்பானவர்களை இழந்த குடும்பங்களை மதித்து, அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக, உலக சுகாதார அமைப்பின் தரவும் , காங்கிரஸின் தலைவர் பதிவிட்ட தரவும் தவறானது என்று குற்றம் சாட்டி, கோவிட் இறப்புகளில் காங்கிரஸ் தலைவர் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியது.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, வைரஸால் இந்தியாவில் ஏற்படும் இறப்புகளைக் கணக்கிடுவதற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிமுறை தவறானது என்றும், இந்திய அரசாங்கம் உலக சுகாதார அமைப்புக்கு தனது ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளதாகவும், PTI தெரிவித்துள்ளது.

கோவிட் காரணமாக ஏற்படும் அதிகப்படியான இறப்புகள் குறித்த அறிக்கையில், தொற்றுநோயின் முதல் இரண்டு ஆண்டுகளில் உலகளவில் 1.5 கோடி பேர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நோயின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாடுகளால் அதிகாரப்பூர்வமாக பதிவான பாதிப்பு கணக்கு 54 லட்சம் ஆகும்.
இந்தியாவில் மட்டும், கோவிட் 2020 மற்றும் 2021-ல் நேரடியாக நோய்த்தொற்று காரணமாகவோ அல்லது அதன் மறைமுக தாக்கம் காரணமாகவோ 47.4 லட்சம் மக்கள் இறந்திருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பின் இந்த எண்ணிக்கை இந்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு இறுதியில் நாட்டின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையான 4.81 லட்சத்தை விட கிட்டத்தட்ட இது பத்து மடங்கு அதிகமாகும்.
உலக சுகாதார அமைப்பானது 2020 ஆம் ஆண்டிலேயே கோவிட் காரணமாக குறைந்தது 8.3 லட்சம் இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறது. அதிகப்படியான இறப்புகளை அளவிடுவதற்கான WHO இன் செயல்முறைக்கு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, மேலும் இது தொடர்பாக சர்வதேச அமைப்புக்கு பலமுறை கடிதமும் எழுதியுள்ளது.

