தமிழகத்தில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் நவம்பர் 7, 1888 ஆம் நாள் சிவி ராமன் பிறந்தார். இவரது பெற்றோர் சந்திரசேகர் அய்யர் மற்றும் பார்வதி அம்மா. சிவி ராமன் அவர்களின் முழுப்பெயர் சந்திரசேகர வெங்கட ராமன் என்பதாகும்.
இவரது தந்தை திரு சந்திரசேகர் அய்யர் கணிதம் மற்றும் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தபடியால் இளம்வயதிலேயே அது சார்ந்த பல புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு சிவி ராமன் அவர்களுக்கு கிடைத்தது. அவரது தந்தை விசாகப்பட்டினத்தில் வேலை பார்த்தபடியால் அங்கேயே தனது பள்ளிப்படிப்பை முடித்தார் சிவி ராமன்.
பின்னர் கல்லூரி படிப்பிற்காக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.இளம் வயதிலேயே அறிவியல் மீது பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்தார் சிவி ராமன். 1905 ஆம் ஆண்டு பிரெசிடெண்சி கல்லூரியில் BA வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்த ஒரே மாணவர் இவர் மட்டுமே.
அப்போது முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கமும் வென்றார] . பிறகு அதே கல்லூரியில் முதுகலை பிரிவில் இயற்பியல் (study of matter and energy) பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்க துவங்கினார்.
ஆரம்ப காலங்களில் ஒலியியல் [sound] குறித்து அறிந்துகொள்வதில் பெரிதும் நாட்டம் காட்டினார். இவருடைய 18 ஆம் வயதிலேயே இவருடைய ஆராய்ச்சி கட்டுரை இங்கிலாந்து நாட்டின் ‘Philosophical Magazine’ இதழில் வெளியிடப்பட்டது. இன்னொரு ஆராய்ச்சி கட்டுரை நேச்சர் [Nature] இதழில் வெளியிடப்பட்டது.
சிவி ராமன் அவர்களின் சகோதரர் சிஎஸ் அய்யர் இந்திய நிதித்துறையில் பணியாற்றினார். ஆகவே தானும் அதே துறையில் சேர்ந்து பணியாற்ற எண்ணி அதற்காக தேர்வு எழுத படிக்கத்துவங்கினார்.
மிகச்சிறப்பாக போட்டித்தேர்வை எழுதிய சிவி ராமன் அந்தத்தேர்வில் முதலிடம் பெற்று கொல்கத்தாவில் பணிக்கு சேர்ந்தார். இருப்பினும் அவரது கவனம் அறிவியல் பக்கம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. 1915 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் கல்லூரி பணியில் சேர சிவி ராமன் அவர்களுக்கு வாய்ப்பு வந்தது.
பின்னர் அவர் இங்கிலாந்து நாட்டிற்கு கடல் மார்க்கமாக பயணம் செய்தார். அப்போது இரவு நேரங்களில் கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்துப்பார்ப்பார். அப்போது அவருக்குள் இருந்த அறிவியல் அறிஞன் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டான்.
கடல் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது? வானத்தின் நீல நிறம் பட்டுத்தான் கடல் நீலமாக காட்சி அளிக்கிறதா? அப்படியானால் ஏன் இரவு நேரத்தில் கூட கடல் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது? அப்போதே அவருக்கு சந்தேகம் பிறந்துவிட்டது. சூரியனில் இருந்து வரும் ஒளியினை இந்த கடல்நீரின் மூலக்கூறுகள் எதிரொலிப்பதில் இருந்துதான் நீல நிறம் தோன்றுகிறது என யோசித்தார்.
கல்கத்தா வந்தவுடன் ஆய்வறிக்கை ஒன்றினை லண்டனில் இருக்கும் ராயல் சொசைட்டிக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த ஆண்டு மூலக்கூறுகள் ஒளியை எதிரொளிக்கும் குறித்த முழு கட்டுரையை வெளியிட்டார்.
ராமன் விளைவு
ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.
இராமன் விளைவில் மாற்றம் அடைந்த அதிர்வெண் கொண்ட வரிகளை இராமன் வரிகள் என்கிறோம். இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.
இவருடைய ஆய்வு முடிவை வைத்துக்கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் பலவற்றில் துவங்கின. இவரது ஆய்வறிக்கை வெளியானதற்கு பின்னர் 1800 ஆராய்ச்சிக்கட்டுரைகள் இது சம்பந்தமாக வெளியாயின.
கிட்டத்தட்ட 2500 க்கும் மேற்பட்ட வேதியியல் மூலக்கூறுகள் சோதித்துப்பார்க்கப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக ராமன் விளைவு அறிவியலாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.
உலகின் பல்வேறு விருதுகள் சிவி ராமன் அவர்களுக்கு கிடைத்தது. 1928 ஆம் ஆண்டில் ரோம் நகரில் இருந்த சயின்ஸ் சொசைட்டி அவருக்கு “Matteucci Medal” பட்டம் கொடுத்து கவுரப்படுத்தியது. 1929 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசால் இவருக்கு “நைட் ஹூட் ” என்ற பட்டமும், இங்கிலாந்து அரசியாரால் ‘சர்’ பட்டமும் அளிக்கப் பட்டது.
1930ல், சிவி ராமன் அவர்களுக்கு ஒளி சிதறல் ஆராய்ச்சிக்காக ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. பின்னர் இந்த கண்டுபிடிப்புக்கு “ராமன் விளைவு” என்று பெயரிடப்பட்டது. ஆசியாவில் இருந்து அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறுவது அதுவே முதல்முறை.
1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது . 1957 இல் லெனின் அமைதிப்பரிசை வென்றார். இவரது ராமன் விளைவு கண்டறியப்பட்ட தினம் பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.