தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; தேர்வெழுத சாதி சான்றிதழ் தடை!

கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் இல்லாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவியின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள செல்லகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் – மங்கம்மாள் தம்பதியினர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, கார்த்திக்-மங்கம்மாள் தம்பதியினர் தனது இரு பிள்ளைகளுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றுள்ளனர்.

தீக்குளிக்க முயன்ற குடும்பத்தை கண்ட அங்கிருந்த தீயணைப்பு துறையினர், கார்த்திக்-மங்கம்மாள் மற்றும் இவர்களது பிள்ளைகளை தடுத்து இவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, தீக்குளிக்க முயன்ற 4 பேரிடம் மாவட்ட வருவாய் ஆட்சியர் விசாரணை நடத்தினர்.

சாதி சான்றிதழ் இல்லை

மாவட்ட வருவாய் ஆட்சியர் மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக்- மங்கம்மாள் தம்பதி கூறியதாவது, ‘எங்களுக்கு கல்லூரி படிக்கும் முத்தமிழ் என்ற மகனும், 10 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்விழி எனும் மகளும் உள்ளனர். தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் பள்ளியில் எங்களது மகள்  தமிழ்விழியிடம் சாதி சான்றிதழ் கேட்டுள்ளனர். சாதி சான்றிதழ் இல்லை என்றால் தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம் என்று பள்ளியில் தெரிவித்திருக்கின்றனர்.

பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகிறோம். யாரும் எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததால் தீக்குளிக்க முடிவு செய்தோம்’ என்று மனமுடைந்து தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வரும் தமிழகத்தில் சாதி சான்றிதழ் இல்லாததால் மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் சமத்துவமின்மையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்னையையை கையில் எடுத்து தீர்வு காண வேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts