சமீபத்தில் சித்ரா பௌர்ணமி விழா மதுரையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் காட்சியை காண பக்தர்கள் அங்கு குவிந்தனர்.கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-
மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காண விழைகிறார். கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார்.
கள்ளழகர் வைகையாற்றின் வடகரைக்கு வரும்போது, திருமணம் முடிந்துவிடுகிறது. இதனால் கோபமடைந்து மதுரை மாநகருக்குள் வர மறுக்கிறார். வண்டியூர் வழியே மீண்டும் அழகர்மலைக்கு திரும்பிச் சென்று விடுகிறார். இது ஒரு புராணக்கதை.
வாமன அவதாரம்
மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவரூபம் எடுத்து ஒரு அடியை பூமியை அளந்தார் .இன்னொரு அடியை விண்ணிலும் வைத்தார்.
மூன்றாவது அடியை மன்னனின் தலையிலும் வைத்தார். இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது பிரம்மா அதற்கு பாதபூஜை செய்கிறார்.
பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர்மலையில் விழுகிறது. அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது. அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது.
நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும்.
நூபுர கங்கையில் சுதபஸ் முனிவர், தண்ணீரில் மூழ்கி மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது துர்வாசர் அங்கு வந்தார். அங்கே நீராடிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவர் அவரை கவனிக்கவில்லை.
அவர் குளித்து முடித்து சற்று நேரம் கடந்து வந்து துர்வாசரை வரவேற்றார். அதனால் துர்வாசர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம்(தவளை) ஆகும்படி சாபமிட்டார்.
சுதபஸ் முனிவர் மன்னிப்பு கேட்டார். அதற்கு துர்வாசர், சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறினார்.
சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ்முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருந்தார். சுந்தரராஜப்பெருமாள் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்தார். இது மற்றொரு புராணக்கதை.
முன்பு மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டது.
பின்னர் திருமலைநாயக்கர் இரண்டையும் ஒரே விழாவாக்கினார் . அதைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
அழகர்கோவிலில் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.
அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. துஷ்டர்களை அழிக்க சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.