கர்நாடக மாநிலம் ஹாசனில் உயர் சாதியினரை முறைத்ததற்காக தலித் இளைஞர் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மார்ச் 30ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏப்ரல் 4ஆம் தேதி பேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள மலேனஹள்ளி என்ற இடத்தில் ‘உயர் சாதி’யைச் சேர்ந்த ஒருவரும் அவரது மகனும் தங்களை முறைத்துப் பார்த்ததற்காக பட்டியல் சாதி இளைஞரைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் 30ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏப்ரல் 4ஆம் தேதி பேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சுனில் குமார் என்ற தலித் இளைஞர், மார்ச் 30 அன்று ஹனிகே கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு தனது கால்நடைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, சந்திரே கவுடா மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் அவர்களது கால்நடைகளுடன் அவருக்குப் பின்னால் சில அடிகள் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். சந்திரே கவுடாவுக்கு சொந்தமான கால்நடை ஒன்று திடீரென சுனிலை நோக்கி ஓடியது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுனில் திரும்பி அப்பாவையும் மகனையும் கோபமாகப் பார்த்தார்.
”நான் அவர்களை வெறித்துப் பார்த்தேன். அவர்கள் என் தோற்றத்தைக் கண்டு தகாத வார்த்தைகளாலும் சாதியைக் கூறியும் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். எதற்காக என் சாதி பெயரை இழுக்க வேண்டும் என நான் கேட்டபோது, அவர்கள் என்னை கட்டையால் தாக்க தொடங்கினர், ”என்று சுனில் வாக்குமூலம் அளித்துள்ளார். தாக்குதலால் அவருக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை உடனடியாக பேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
லோகேஷ், 45, மற்றும் சந்திரே கவுடா, 70 ஆகியோருக்கு எதிராக, சுனில், பேலூர் போலீசில் புகார் செய்தார். இருப்பினும், கிராமத்தில் உள்ள சிலர், புகாரை பதிவு செய்யாமல் இருக்க அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் சில உயர் போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு வழக்கு பதிவு செய்தனர். எஸ்சி-எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின்படியும், ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின்படியும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில், இடஒதுக்கீடு குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாமல் காழ்ப்புணர்ச்சியோடு கல்வி நிலையங்களில், சமூகத்தில் என சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்க ”இப்பல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்று ஒரு தரப்பு மக்கள் கூறி கொண்டு தான் இருக்கின்றனர்.