‛யாராலும் திருட முடியாத சொத்து உண்டு என்றால் அது கல்வி மட்டுமே’ என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பள்ளி மேலாண்மை குழுக்களின் சீரமைப்பு
அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் கல்வி மேலாண்மை குழுக்களை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்ட சபையில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழுக்களை மறுக்கட்டமைப்பு செய்வதற்கான திட்டத்தை துவங்கி வைத்தார். கல்வி மற்றும் பள்ளிக்கூடம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ‘நம் பள்ளி நம் பெருமை’ என்ற பிரச்சார வாகனத்தை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.
யாராலும் திருட முடியாத சொத்து – கல்வி
“யாராலும் திருட முடியாத சொத்து உண்டு என்றால் அது கல்வி மட்டுமே. அதனால்தான் பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த அரசு மிகமிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சிந்தனை ஒரு நேர்கோட்டில் இருந்தால்தான் கல்வி எனும் நீரோடை சீராக செல்ல முடியும். இதில் எவர் தடை போட்டாலும் தடம்புரண்டுவிடும்.குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். பெற்றோரின் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். குழந்தைகளின் கல்வி என்பது சமூக எதிர்காலத்தின் அடித்தளம். அவர்களுக்கு அளிக்கக்கூடிய தரமான கல்வி தான் சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வியைக் கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதுதான் நமது அரசினுடைய லட்சியம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.