அரசியல்இந்தியா

சசிகலாவிற்கு சிறையில் சொகுசு வசதிகள்; ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கு ரத்து!

சசிகலா இருந்த பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடு நடந்ததாக புகாரளித்த ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா மீது ஓய்வுபெற்ற டிஜிபி சத்தியநாராயணா மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தற்போது அந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் சொகுசு வசதி

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தண்டனை காலம் முடிவடைந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், தற்போது தமிழக அரசியலில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு சசிகலாவிற்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா, கர்நாடக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.

சசிகலா

மானநஷ்ட வழக்கு

அந்த அறிக்கையில், ‘சசிகலாவிற்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவுக்கு தொடர்பு உள்ளது’ என்று கூறி இருந்தார். மேலும், கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூரு 9-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சத்திய நாராயணராவ், ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனு தாக்கல்

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ரூபாவிடம் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அதை எதிர்த்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஐ.பி.எஸ். அதிகாரியான என் மீது மற்றொரு அரசு அதிகாரி மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி இல்லை. மேலும், மானநஷ்ட வழக்கை 6 மாதத்திற்குள் தொடர வேண்டும், ஆனால் சத்திய நாராயணராவ் 6 மாதம் கழித்து தான் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஐ.பி.எஸ் அதிகாரி ரூபா

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் ‘ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி மீது மற்றொரு அதிகாரி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வது மானநஷ்டம் ஆகாது. அரசிடம் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் மானநஷ்ட வழக்குக்கு இது பொருந்தாது. மேலும், ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதனையும் பெங்களூரு கீழ் நீதிமன்றத்தில் பெறப்படவில்லை. இந்த வழக்கில் மனுதாரர் ரூபாவுக்கு கீழ் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருப்பது சட்டத்திற்கு எதிரானதாகும். அதனால் மனுதாரர் மீது கீழ் உயர்நீதிமன்றத்தில் நடக்கும் மானநஷ்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

Related posts