தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் 31ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. அதன்படி இன்று முற்றகையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விலை உயர்வு
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் அதிகரிப்பால் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மளமளவென்று உயர்ந்தது. அதிகபட்சமாக பெட்ரோல் 110 ரூபாய்க்கும், டீசல் விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த 21ம் தேதி முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால் விலைகுறைந்து பெட்ரோல் 102 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
வரி குறைப்பு
மேலும், மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நிர்மலா சீதாராமன். இதனைத்தொடர்ந்து 72 மணி நேரத்தில் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 24ம் தேதி போராட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டது.
72 மணி நேர கெடு
கடந்த 25ம் தேதியோடு அண்ணாமலை கொடுத்த 72மணி நேர கெடு முடிந்த நிலையில் கடந்த 26ம் தேதி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் மறுநாள் செய்தியாளர்களை சந்தித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது அவர் அந்த அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமரின் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று விமர்சித்தார்.
அரசு விளக்கம்
மேலும், அவர் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கததால் ஏற்கனவே சொன்னதுபோல் வரும் 31ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டதாக தமிழக அமைச்சர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பாஜக பேரணி
இந்நிலையில், இன்று சென்னை எழும்பூரிலிருந்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக படையெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜகவை சேர்ந்த பலரும் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையை சுற்றியும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் ராஜாஜி சாலை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.