தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வது கமிஷன், கலெக்சன், கரப்ஷன் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
அண்ணாமலை அறிக்கை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2013-ம் ஆண்டு முதல் TET ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கிறார்கள். இவர்களில் முதல் முறையும், 2-வது முறையும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியவர்கள் இருக்கிறார்கள். 30 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதியுடன் பணிக்காக காத்திருக்கும்போது இவர்களையெல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு, தற்போது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களை கொண்டு ஆசிரியர் பணி இடங்களையெல்லாம் நிரப்பவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதி
மேலும், ‘ஆளும் திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியது என்ன ?. கடந்த 2013ம் ஆண்டு தேர்வெழுதி தகுதியுடன் காத்திருக்கும் நபர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளீர்கள். ஆனால் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டாகிவிட்டது. தற்போது தேர்வெழுதிய ஆசிரியர்கள் பணிக்காக காத்திருக்கும் போது தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் எதற்காக செய்ய வேண்டும்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
கமிஷன், கலெக்சன், கரப்ஷன்
மேலும், ‘தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ஏன் ? இவ்வாறு செய்தால் கமிஷன், கலெக்சன், கரப்ஷனுக்கு வழிவகுக்கும். ஏன்னெனில், மாநில பள்ளிக்கல்வித் துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். தேர்வெழுதி தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கும் 30,000 ஆசிரியர்களை காலியாக இருக்கின்ற பணியிடங்களில் முறைப்படி முழுமையான ஊதியத்துடன் நியமனம் செய்யவேண்டும். ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்ற ஒற்றை கனவுடன் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
மாணவர்கள் கல்வி
நங்கள் பெரிதாக ஒன்றும் கேட்கவில்லை. திமுக கூறிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நீங்கள் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த ஒரு வாக்குறுதியாவது நிறைவேற்றுங்கள். தமிழக மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதை மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.