தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேலும், இந்த விழாவில் தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வாய்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அண்ணாமலை பேச்சு
நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அடங்கிய பா.ஜ.க குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘செஸ் போட்டியில் பிரதமரின் பங்கினை பற்றி முதல்வர் பேசியதை பாராட்டியே ஆகவேண்டும். 5000 ஆண்டு பாரம்பரிய வரலாற்றை உணர்த்தியதில் தமிழனாக பெருமிதம் கொள்கிறேன்’ என்று கூறினார்.

