திருவாரூர்: திருவாரூரில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே கொள்ளை. ஒரே சமயத்தில் இரண்டு வீட்டில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே, ஒரே சமயத்தில் இரண்டு வீடுகளில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பதற்றமடைய செய்துள்ளது. வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே நடைபெற்ற இந்த திருட்டை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதல் கொள்ளை
கோட்டூர் அருகே குன்னியூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமலதாசன். இவர் அந்த கிராமத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவரக இருக்கிறார். கமலதாசனும் தனது குடும்பத்தினரும் வீட்டின் முன்பகுதியில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார்கள். அவரின் குடும்பத்தினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் அந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 6 சவரன் தங்க நகை மற்றும் 37 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்று இருக்கிறார்கள்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த பொழுது வீட்டின் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கமலதாசனும் அவரது குடும்பத்தினரும், உடனே காவல் துறையினரை தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்
இந்நிலையில் அதே ஊரில், அதே போல் ஒரு சம்பவம் வேறொரு வீட்டிலும் நடந்துள்ளது. மந்தக்கரை தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். இவரின் வீட்டின் பின்புற கதவையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 10 கிராம் தங்க நகை, வெள்ளிக்கொலுசு போன்றவையை திருடி சென்று இருக்கிறார்கள். ஒரே சமயத்தில் அதுவும் வீட்டில் ஆள்கள் இருக்கும் போதே நடைபெற்ற இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
போலீஸ் விசாரணை
இது குறித்து, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கமலதாசன் வீட்டில் கொள்ளையடித்த, அதே கும்பல் தான் ஜெயராமன் வீட்டிலும் திருடி இருக்க கூடும் என்றும் போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.