சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபால் வீராங்கனையான பள்ளி மாணவி சிந்து கடந்த ஆண்டு வீட்டின் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரு கால் எலும்புகளும் முறிந்தன. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிந்துவிற்க்கு 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.
உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு உட்காரவும், நடக்கவும் முடியாத சூழலில் உள்ளார். ஆனாலும் மனம் தளராத சிந்து தனது நம்பிக்கையை இழக்கவில்லை, அவளுடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் அவளுடைய தேர்வுக்குத் தயாராகிறார். கடந்த வாரம் தனது பெற்றோரின் உதவியால் நடைமுறைத் தேர்வுகளிலும் கலந்து கொண்டார்.மாணவி சிந்துவின் நிலையை அறிந்த தமிழக முதல்வர் அவரது மருத்துவ செலவை அரசாங்கமே ஏற்கும் என வாக்களித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!”
கடுமையான நெருக்கடிகளின் போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும், கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்.
தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்!. மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்! என்று தெரிவித்துள்ளார்