பேசின் பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்துக்கொண்டிருந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்குள் புகுந்தது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில் ஒன்று பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. நிறுத்தம் வந்தவுடன் ரயிலை நிறுத்த ஓட்டுநர் பவித்ரன் முயன்றுள்ளார். ரயில் நிக்கவில்லை.
ரயில் கட்டுப்பாட்டை மீறி சென்றுக்கொண்டிருந்ததால், நடை மேடையில் நின்றவர்களை விலகிக்கொள்ளுமாறு ஓட்டுநர் பவித்ரன் கையசைத்துள்ளார். அதனால் அங்கு நின்ற பயணிகள் விலகிக்கொண்டனர்.
தடையை உடைத்துக்கொண்டு சென்ற ரயில் நடைமேடைமேல் ஏறி அங்குள்ள கடைகளை நாசம்செய்து, ஒருவழியாக நின்றது. ஓடும் ரயிலிலிருந்து குதித்து ஓட்டுநர் பவித்ரன் உயிர்தப்பினார். ரயில் பணிமனையிலிருந்து வந்ததால் ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. நடைமேடையில் கூட்டம் குறைவாக இருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ரயில் கட்டுப்பாட்டை இழந்து மோதிய cctv காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போதே நெஞ்சம் பதைக்கிறது.
இந்நிலையில் ரயில் விபத்து குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. பணி மனையில் இருந்து வந்த ரயில் பிரேக் பிடிக்காமல் போனது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.