ஆன்மீகம்

விளக்குகளின் வகைகளும் விளக்கேற்றுவதின் மகிமையும்

எந்த ஒரு பிரார்த்தனையும், தபசும், யாகமும், பூஜையும் விளக்கு இல்லாமல் முழுமை அடையாது. ஏனென்றால் பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த உலகில் உள்ள எந்த ஒரு சக்தியையும் ஆண்டவனிடம் எடுத்துச் செல்லும் ஆற்றல் விளக்கிற்கு உண்டு.

விளக்கு ஒன்றே மேல் நோக்கி எரியக்கூடியது. ஒரு விளக்கு எத்தனை ஆயிரம் ஒளியை ஏற்றினாலும் தன் ஒளியை இழப்பது இல்லை. தோஷங்களை நீக்கும் சக்தி விளக்குக்கு உண்டு.

முற்காலத்தில் உலோகங்களால் விளக்குகள் செய்ய உளிகளும், சுத்தியல்களும் கிடையாது என்பதால் மக்கள் மண் விளக்கையே பயன்படுத்தியுள்ளனர். மருதநில மக்கள் மண் விளக்கில் கலை அம்சத்தைப் புகுத்தியுள்ளனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

மக்கள் உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் கல் விளக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பிறகு பல்வேறு வேலைப்பாடுகள் கொண்ட, கலை அம்சம் நிறைந்த விளக்குகள் வர ஆரம்பித்து விட்டன.

கை விளக்கு :

இது ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல வசதியாகச் சிறிய விளக்காக இருக்கும். இதற்குக் கைப்பிடியும், அரசிலை போன்ற பாதமும் இருக்கும்.

கைப்பிடியில் இஷ்டதெய்வத்தின் திரு உருவங்கள், இலை, கொடிகள், யானை, மயில் போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

குத்துவிளக்கு :

பழங்காலத்தில் விளக்குகள் மரத்தண்டின் மீது இரும்பு அகல் பொருத்தி பயன்படுத்தப்பட்டன. மரப் பகுதியை மண்ணில் ஊன்றி நட்டுப் பயன்படுத்தினர்.

இதனால் இது குத்துவிளக்கு எனப்பட்டது. இது உயரத்தில் இருந்து ஒளி வீசியதால் ஒளி எங்கும் பரவியது. மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

பிற்காலத்தில் இதை பித்தளை,வெண்கலம், ஐம்பொன் போன்ற உலோகங்களில் செய்யும் போது நான்கு பாகங்களாகப் பாதம், தண்டு, அகல், உச்சி எனப் பிரித்தனர். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா, நடுத்தண்டு விஷ்ணு, உச்சிப்பகுதி சிவன்.

விளக்கின் சுடர் மகாலக்ஷ்மி என்றும், ஒளி சரஸ்வதி என்றும், வெப்பம் பார்வதி என்றும் சமய சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தூண் விளக்கு :

இது கேரள கோயிகளில் அதிகம் காணப்படும். கொடிமரம் போல இருக்கும் இந்த தூண் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டதும் அதன் வெளிச்சத்தைப் பார்த்து சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் கோயிலுக்கு வர வசதியாக இருக்கும்.

மாவிளக்கு :

பெருமாளுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் – திருவோணம் நட்சத்திரத்தில் போடப்படும் மாவிளக்கு விசேஷம். புரட்டாசி மாதம் எல்லா சனிக்கிழமைகளிலும் மாவிளக்குப் போட்டு வழிபடுவது நன்மைபயக்கும்.

பச்சரிசியை ஊறவைத்து மாவாக்கி, வெல்லம் கலந்து அகல் விளக்கு போல் செய்து சுத்தமான நெய், பஞ்சுத் திரி இட்டு விளக்கு ஏற்றப்படும். அம்பாளுக்கும் மாவிளக்கு விசேஷம்.

திருக்கார்த்திகை தீபம் :

கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்படும் தீபத்திருநாளே திரு விளக்கின் சமயத்தொடர்பை விளக்கும். அக்னி தலமான திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றப்படுவதும் திருக்கார்த்திகை தினத்தில்தான்.

கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனை எடுத்து வளர்த்ததால் கிருத்திகை முருகனுக்கு உரிய நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

கிருத்திகை தினத்தில் எல்லா ஆலயங்களிலும் தீபத்திருநாள் நடைபெறும். ஐப்பசி, கார்த்திகை மாதம் மழைக் காலம். இந்தச் சூழலில்தான் அதிகமான பூச்சிகள், நோய்க் கிருமிகள் பரவும்.

இதனைப் போக்கத்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டின் முன் வாசலிலும், புழக்கடையிலும் விளக்கேற்றி வைப்பர். பூச்சிகள் விளக்கு சுடரில் பட்டு இறந்துவிடும்.

சிறுவர்கள் ‘சொக்கட்டான்’ சுற்றுவார்கள். அதாவது பனங்காயில் நுங்கை எடுத்து விட்டு அதில் கரி, மரத்தூளைப் போட்டு கயிறு கட்டிச் சுற்றுவார்கள்.

இது பூச்சிகளை, நோய்க் கிருமிகளை அழிக்கும். கோயில்களில் ‘சொக்கப்பனை’ கொளுத்துவார்கள். இதிலிருந்து வெளிப்படும் புகை, நோய்க் கிருமிகளை அழிக்கும்.

உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு எல்லா மக்களுமே இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள்.

அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.

அது மட்டுமின்றி திருவிளக்கில் சமயம் சார்ந்த தத்துவங்கள் அடங்கி இருப்பதாக நம் பழம்பெரும் சமய சான்றோர்கள் கண்டார்கள்.

Related posts