புகழ்பெற்ற முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
தமிழ் கடவுள்
இந்துக்களால் தமிழ் கடவுளாக போற்றப்படுபவர் முருகப்பெருமான். இவருக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை ஆகிய ஆறு படைவீடுகள் உள்ளன. ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் கருதப்படுகிறது. இக்கோவிலின் கோபுரம் 150 அடி உயரம் கொண்டதாகவும் மற்றும் ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.
வைகாசி விசாக திருவிழா
முருகப்பெருமான் பிறந்த தினமாக கொண்டாடப்படும் வைகாசி விசாக திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் முருகபெருமான் ஆலையங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடுவார்கள்.
கொரோனா தொற்று
கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த வைகாசி விசாக தினத்தன்று கோவிலில் வழக்கம்போல் சுவாமிக்கு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் தரிசனம்
வரும் 12ம் தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது, இதனால் கடந்த சில தினங்களாகவே திருச்செந்தூர் முருகன் கோயிலில் சற்று கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலை முதலே வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு
இதனால் நேற்று வழக்கத்தை விட அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பாதை யாத்திரையாக பக்தர்கள் பலரும் வந்துள்ளனர். அவர்களில் சிலர் சண்முக விலாசம் மண்டபம் வழியே கோயிலுக்குள்ளே செல்ல முற்பட்டனர். அப்போது கோயில் ஊழியர்கள் அவர்களை தடுத்ததனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் பக்தர்களை சமாதனப்படுத்தி பொது தரிசன வரிசையில் அனுப்பிவைத்தனர்.