அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையம் பற்றித் தெரியுமா?

சத்தமே இல்லாமல் நம் தலைக்கு மேலே வானில் வட்டமடிக்கும் விண்வெளி நிலையம். அதில் இருந்து கொண்டு பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆமாம், மிகப்பெரிய விண்வெளி நிலையம் ஒன்று நமக்கு மேலே சுற்றிவருகிறது. ஆச்சர்யமாக இருக்கிறதா?

அதே ஆச்சர்யத்தோடு சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிகவும் விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அது ‘சர்வதேச விண்வெளி நிலையம்’ தான். இதனுடைய விலை $120 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் ‘International Space Station’ என அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பின்வரும் 16 நாடுகள் இணைந்துதான் உருவாக்கியுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, பெல்ஜியம், , பிரான்ஸ் ,  இத்தாலி, நெதர்லாந்து,  ஸ்பெயின், சுவீடன்,  ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் பங்களிப்பில் இது நிறுவப்பட்டுள்ளது.

விண்வெளியில் நிறுவப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது ஒரு வினாடிக்கு 5 மைல் வேகத்தில் பூமியை சுற்றிவருகிறது. ஒருமுறை பூமியை சுற்றி வருவதற்கு 90 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

விண்வெளிக்கு மனிதர்களால் அனுப்பட்டதிலேயே மிகப்பெரியது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் தான். இது லட்சக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பொருள்களைக்கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குள் அழுத்தத்தின் அளவானது போயிங் 747 விமானத்தில் இருப்பதற்கு இணையாக [32,333 கன அடி அழுத்தம்] இருக்கும்.

நவம்பர் 2000 முதல் தொடர்ச்சியாக இயங்கிவரும் இங்கு இதுவரைக்கும் 19 நாடுகளைச் சேர்ந்த 241 தனி நபர்கள் வந்துள்ளனர்.

ஒருநாளைக்கு 16 முறை பூமியை சுற்றிவரும் இந்த ஆராய்ச்சி நிலையமானது 16 சூரிய உதயம் மற்றும் அஸ்தமனங்களையும் ஒருநாளைக்கு கடந்து வருகிறது.

நிலவு, வெள்ளி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக பிரகாசமாக இரவில் தெரியக்கூடியது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் தான். வேகமாக செல்லும் விமானம் போல இரவு நேரங்களில் காட்சி அளிக்கும்.

ஈர்ப்பு விசையற்ற இடத்தில் இருப்பதனால் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகளின் தசை மற்றும் எலும்பு எடை குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனை தவிர்க்க குறைந்தது 2 மணி நேரமாவது அவர்கள் உடற்பயிற்சி செய்திடுவது கட்டாயம்.

ஏக்கர் கணக்கில் சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இருந்துதான் தேவையான மின்சக்தி பெறப்படுகிறது. நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் வேலை செய்பவர்களின் நலனை காப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக 350,000 சென்சார்கள் மூலமாக கண்காணிக்கப்படுகின்றன.

என்றேனும் ஒரு இரவில் நீங்கள் வானத்தை பார்க்கும் போது வெளிச்சமான ஒரு பொருளொன்று வெகு தூரத்தில் நகர்ந்து சென்றுகொண்டு இருந்தால், அது சர்வதேச விண்வெளி நிலையமாகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

 

Related posts