வணிகம்

சென்னை தங்கசாலை (எ) மின்ட் தெரு – பெயர்காரணமும் வணிக வரலாறும் !

பண்டைய காலத்தில் நாணயங்களை ‘காசுகள்’ என்றும் ‘பணம்’, ‘வராகன்’ என்றும் அழைத்திருக்கிறார்கள். 1640 ல் ‘ஹேல்’ என்னும் அதிகாரி காலத்தில், நாணயச் சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, முகமதியர் (இஸ்லாமியர்) முத்திரையோடு வெள்ளி நாணயங்களை அச்சடித்து வெளியிட, சென்னை தங்க சாலைக்கு (நாணயச்சாலை) மாற்றியிருக்கிறார்கள்.

சிந்தாதிரிப்பேட்டையிலும் நாணயச்சாலை ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதனை லிங்கசெட்டி என்பவர் கவனித்து வந்திருக்கிறார். வங்காளத்திற்கு ஆற்காட்டு நாணயங்கள் இங்கிருந்துதான் அனுப்பபட்டன.

ஆரம்பத்தில் இது கோட்டையிலும் அமைக்கப்பட்டு, குத்தகை மூலம் நாணயம் அச்சடிக்கப்பட்டு வந்திருக்கிறது. தங்கசாலை குத்தகைக்காரரான லிங்கசெட்டியின் பரம்பரையினர் ‘காசுக்கார செட்டிமார்’ என்று இன்னும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

1814 ல் சர்.தாமஸ்மன்றோ காலத்தில் நடைமுறை வழக்கத்திலிருந்த நட்சத்திர வராகனுக்குப் பதிலாக ரூபாய் நாணயங்கள், சென்னை மாகாண‌த்தின் நிரந்தர செலவாணியாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வராகனுக்கு 3.5(மூன்றரை) ரூபாய்கள் என்று கூறப்பட்டு புதிய நாணயங்கள், கால் ரூபாய்கள், இரண்டணா‌க்கள், அணாக்கள் என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாமே வெள்ளியினாலேயே செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர அணாவுக்கு 6 பைசாக்கள் என்கிற வீதத்தில், சிறு செப்புக் காசுகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 

காலப்போக்கில் நாணயசாலை திருத்தியமைக்கப்பட்டு தங்கசாலையின் வடக்கு முனையில் உள்ள நாணய மாளிகை இடத்திற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இந்த மாளிகை உள்ள இடத்திற்கு அருகில் இருந்த வெடிமருந்து சாலையில் பல தடவை விபத்து ஏற்பட்டதால், அதனை கறுப்பர் பட்டினத்து சுவருக்கு சற்று அப்பால் மாற்றிவிட்டு, அந்த இடத்தில் 1807ல் புதிய நாணயச்சாலை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 1833ல் சென்னையில் இருந்த தங்க சாலையை மூடிவிட்டு, கல்கத்தாவில் இருந்த நாணயச்சாலையில் நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.

Related posts