மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமான பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது, அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கமுதக்குடி சேர்ந்தவர் மணிகண்டன். தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வந்த இவர், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்து இருந்தார்.
அதன்பேரில் அவருக்கு வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு கட்டும் பணிகளை தொடங்கினார்.
அப்போது நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர், வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக ரூ.3 ஆயிரத்தை மணிகண்டனிடம் இருந்து லஞ்சமாக வாங்கி உள்ளார். வீட்டின் மேற்கூரை கான்கிரீட் போட்டவுடன் சிறிதளவு தொகை மணிகண்டனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகையில் இருந்தும் ரூ.15 ஆயிரத்தை அதே வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது.
வீடு கட்டும் பொழுது ஒவ்வொரு படிநிலை முடிந்ததும் அந்த படி நிலைக்கு ஏற்றவாறு தவணைத் தொகையை விடுவிப்பது அரசின் வழக்கம். அதுபோல கடைசியாக வீடு இறுதி பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது தவணை தொகையை விடுவிக்க மணிகண்டன் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியரை அணுகியுள்ளார். அதற்கு அவர், `விரைவில் விடுவிக்கிறேன்’ என காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இதனால் மணிகண்டன் வெளிநாட்டுக்கு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் வாங்கிய பணம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வீட்டை முக்கால்வாசி பூர்த்தி செய்துள்ளார். பூர்த்தி செய்த பிறகு மீண்டும் அவரை அணுகி தவணைத் தொகையை விடுவியுங்கள் என கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஊழியர்,கால தாமதம் செய்ததும், மேலும் லஞ்சம் கேட்டதாலும் மனமுடைந்த மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் , ‘மணிகண்டனின் தற்கொலைக்கு மகேஸ்வரன் மட்டும் காரணமல்ல அவர்களை உருவாக்கும் அரசு நிர்வாக முறையும் தான் காரணமாகும். மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமான பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்திருப்பது மட்டும் போதாது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், மணிகண்டனின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.