அரசியல்தமிழ்நாடு

சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியோர் மற்றும் பதிலளித்தோர் பட்டியல் – அவைத்தலைவர் பாராட்டு !

சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியோர் மற்றும் பதிலளித்தோர் பட்டியலை அவைத்தலைவர் அப்பாவு வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் மே 6ம் தேதி தொடங்கி மே 10ம் நிறைவடைந்தது. 22 நாட்கள் நடந்த இந்த கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் எழுப்பியோர், அதிக பதில் கூறியோர் என்ற பட்டியலை அவைத்தலைவர் அப்பாவு நேற்று வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

அதிக கேள்விகள் கேட்டோர் பட்டியல்

இந்த கூட்டத்தொடரின் மூலமாக அதிக வினா கேட்ட உறுப்பினர்களில், திமுகவை சேர்ந்த ப.சிவகுமார் என்ற தாயகம் கவி அதிகபட்சமாக 8,446 கேள்விகளை கேட்டு முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணி 8,312 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இதேபோல், திமுகவை சேர்ந்த ஏ. எம். வி. பிரபாகர் ராஜா 5,425 கேள்விகள் கேட்டு மூன்றாம் இடத்திலும், பாமகவை சேர்ந்த அருள் 5,036 கேள்விகளை எழுப்பி நான்காம் இடத்திலும், பாமகவை சேர்ந்த ச.சிவகுமார் 2,937 கேள்விகளை எழுப்பி ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.

அதிக கேள்விகள் பதிலளித்தோர் பட்டியல்

சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலா 15 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.

சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நல, விளையாட்டு மேம்பாட்டுத்துறை சீவ .வீ .மெய்யநாதன் 14 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலா 13 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 12 கேள்விகளுக்கும், நகராட்சி, நீர்வளத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் தலா 11 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளனர்.
இதனை வெளியிட்டு அவைத்தலைவர் அப்பாவு அவர்கள் அனைவரையும் பாராட்டியுள்ளார்.

Related posts