உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக நாம் செய்யும் காரியங்களில் உடற்பயிற்சி மிக முக்கியமானது. உடல் எடையை குறைக்கவும், நோய்கள் வராமல் தடுக்கவும் நம்மில் பலர் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்கிறோம்.
ஆனால், நாம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறோம் என்பதை விட, எந்த நேரத்தில் செய்கிறோம் என்பதுதான் நம் உடல்நலனில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை தடுப்பதற்கும் காலை நேர பயிற்சிகள் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகின்றன.
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது?
உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், American College of Cardiology-ன் சமீபத்திய ஆய்வு ஒன்று, உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கும் நம் இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்துள்ளது.
சுமார் 14,000 பேரிடம் ஒரு வருடம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிகாலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் அபாயம் மற்றவர்களை விட மிக குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, காலை 7 மணி முதல் 8 மணிக்குள் உடற்பயிற்சி செய்வதுதான் இதயத்திற்கு மிகவும் உகந்த நேரம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்ற நேரங்களில் உடற்பயிற்சி செய்பவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகள் ஆச்சரியப்பட வைக்கின்றன.
ஆய்வு சொல்லும் முக்கிய முடிவுகள்
ஒரே அளவிலான உடற்பயிற்சியை வெவ்வேறு நேரங்களில் செய்தவர்களை ஒப்பிட்டு பார்த்தபோது, காலையில் உடற்பயிற்சி செய்தவர்களுக்குக் கிடைத்த நன்மைகள் இதோ,
உயிரியல் கடிகாரம்: நம் உடலுக்கு என்று ஒரு இயற்கை கடிகாரம் உண்டு. காலையில் நம் உடலில் இன்சுலின் உணர்திறன் (Insulin Sensitivity) அதிகமாக இருக்கும். மேலும், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான ‘கார்டிசோல்’ போன்ற ஹார்மோன்களும் காலையில் தான் சுரக்க தொடங்கும். இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நம் உடலின் இயற்கையான செயல்பாட்டோடு ஒத்துப்போகிறது.
கொழுப்பு எரிப்பு : பொதுவாக நாம் காலையில் உணவு உண்பதற்கு முன்பே உடற்பயிற்சி செய்வோம். அந்த நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என்பதால், உடல் தனக்கு தேவையான ஆற்றலை சேமித்து வைத்துள்ள கொழுப்பிலிருந்து எடுக்க தொடங்கும். இது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
தொடர்ச்சி மற்றும் கவனம்: காலை நேர உடற்பயிற்சியை தவறவிடுவது கடினம். ஏனென்றால், அன்றைய நாளின் மற்ற வேலைகளோ அல்லது அலைபேசி அழைப்புகளோ தொடங்குவதற்கு முன்பே நாம் பயிற்சியை முடித்துவிடுவோம். இது நம்மை தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய தூண்டுகிறது.
நிபுணர்களின் ஆலோசனை
இந்த ஆய்வை மேற்கொண்ட மாசசூசெட்ஸ் சான் மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர் பிரேம் படேல் கூறுகையில், “எந்த நேரத்திலுமே உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு, ஏதோ ஒரு நேரத்தில் செய்வது சிறந்ததுதான். ஆனால், கூடுதல் நன்மைகளை அடைய விரும்புபவர்கள் காலை நேரத்தை தேர்ந்தெடுப்பது பல மடங்கு பலன் தரும்” என்கிறார்.
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். உங்களால் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். மாலையிலோ அல்லது இரவு நேரத்திலோ தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதையும் விடாதீர்கள். ஏனெனில், ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தொடர்ச்சியான உடற்பயிற்சியே மிக முக்கியம்.

