நம் பாட்டி காலத்தில்கூட, 10 – 15 குழந்தைகள் வரை பெற்றிருப்பார்கள். அத்தனை குழந்தை பெற்றெடுத்ததாலே நம் பாட்டிக்களை ‘ஆரோக்கியமானவர்கள்’ என சிலர் சொல்வர். ஆனால் உண்மையில் 10 – 15 குழந்தைகள் பெறுவது ஆரோக்கியம்தானா?
நொய்டாவில் பெண்ணொருவர் தனது ஆறாவது குழந்தைக்கு தாயாகியிருக்கிறார். இந்தக் குழந்தைக்கும், 5-வது குழந்தைக்கும் வெறும் 11 மாதங்களே வித்தியாசம். அதாவது, 5-வது குழந்தை பிறந்த சில தினங்களிலேயே அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். நம் ஊர்களிலும்கூட, முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இப்படி குறைவான இடைவெளி இருக்கும் குடும்பங்கள் உண்டு. இருப்பினும் இது உடல்நலனுக்கு ஏற்றதுதானா என்ற கேள்வியும் உள்ளது.
பெண்கள் பொதுவாக 12 முதல் 15 வயதுக்குள் தங்களின் முதல் மாதவிடாயை பெறுகின்றனர். சராசரியாக 50 முதல் 51 வயதில் கடைசி மாதவிடாயை பெறுகின்றனர். ஒரு ஆரோக்கியமான பெண்ணால் இந்த இடைப்பட்ட காலத்தில், தனது இனப்பெருக்க வாழ்க்கையின் மூலம் ஆண்டுக்கொருமுறை கர்ப்பமானால்கூட, 15 முதல் 30 குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். இருப்பினும் அப்படி ஆண்டுக்கொருமுறை கருத்தரிப்பது மிக மிக அரிதானது மற்றும் மிக மிக ஆபத்தானது.
அறிவியல் ஆய்வுகளின்படி, ஒரு பெண் குழந்தை தனது தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும்போது, அதன் கருப்பையில் சுமார் 6 முதல் 7 மில்லியன் முதிர்ச்சியடையாத கருமுட்டைகள் இருக்கும். பிறக்கும் போது, இந்த எண்ணிக்கை சுமார் 1 மில்லியனாகக் குறைகிறது. இளமைப் பருவத்தை அடையும் போது, சில லட்சம் முட்டைகள் மட்டுமே எஞ்சியிருக்கும். இவற்றில், 400 முட்டைகள் மட்டுமே முதிர்ச்சியடைந்து வாழ்நாள் முழுவதும் கருமுட்டை வெளியேறும். இதுவே வயதுக்கு ஏற்ப கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவதற்குக் காரணம்.
பிபிசியில் ஸ்டான்போர்ட் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் வலேரி பேக்கர் அளித்துள்ள பேட்டியில், ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்புகள் 45 வயதிற்குள் மாதத்திற்கு சுமார் 1 சதவீதம் குறைகின்றன. அதாவது, 40 வயதிற்குப் பிறகு பெண்கள் இயற்கையாக கருத்தரிக்கும் விகிதம் மிகவும் கடினமாகிவிடும்.
மற்றொரு பக்கம் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பது, பெண்ணின் உடலுக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு கர்ப்பமும் ரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சி-பிரிவு பிரசவம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பிரசவம் செய்வது கருப்பை மற்றும் பிற இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
அதற்காக 40 – 50 வயதில் குழந்தையே பெற முடியாது என்றோ ஒரு பெண் தன் மொத்த வாழ்நாளில் 40 அல்லது 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது என்றோ சொல்ல முடியாது. அப்படியும் சில அசாதாரண நிகழ்வுகள் வரலாற்றில் உள்ளன. அடுத்தடுத்த பிரசவங்களில் ஒரே பெண்ணுக்கு இரட்டையர்கள், ட்ரிப்பிள்ஸ் அல்லது நான்கு குழந்தைகள் கூட பெரும்பாலும் பிறந்தன. இருப்பினும், இவையாவும் அரிதானவை மற்றும் நவீன மருத்துவத்தில் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
நம் பாட்டி காலத்தில், 10 – 15 குழந்தைகள் வரை பெற்றிருப்பார்கள். அதனாலேயே பாட்டிக்களை ஆரோக்கியமானவர்களாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அந்தக் குழந்தைகள் அனைத்தும் ஆரோக்கியமான முறையில் பிறந்து வளர்ந்ததா, அதில் எத்தனை குழந்தைகள் பிறக்கும் போதே இறந்திருந்தன, மாற்றுத்திறனாளிகளாக பிறந்திருந்தன, அத்தனை குழந்தைகளை பெற்றெடுத்த அம்மாக்களின் உடல்நலன் எப்படி இருந்தது என்பதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான் ‘15 முதல் 30 குழந்தைகள் வரை பிறக்கும் வாய்ப்பு சாத்தியம் என்றாலும், நடைமுறையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் பிரசவங்களின் எண்ணிக்கை உயர உயர, அவருக்கான உடல்நல அபாயங்கள் கணிசமாக அதிகரிக்கின்றன’ என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
ஒவ்வொரு பெண்ணின் உடலும் வேறுபட்டது என்பதால், கருத்தரித்தலை பொறுத்தவரை எந்தவொரு குறிப்பிட்ட எண்ணிக்கையும் இல்லைதான். இருப்பினும் கர்ப்பங்களுக்கு இடையில் இடைவெளி விட்டு, தாய் – சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் ஒரு பெண் தன்னுடைய பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, எத்தனை குழந்தைகளை தன்னாலும் தன் இணையராலும் மகிழ்ச்சியாக வளர்க்க முடியும் என்பதை உணர்ந்து திட்டமிட்டு குழந்தை பெற்றெடுப்பதே ஆரோக்கியமான வழிமுறை.
ஒவ்வொரு பெண்ணின் உடலும் வேறுபட்டது என்பதால், கருத்தரித்தலை பொறுத்தவரை எந்தவொரு குறிப்பிட்ட எண்ணிக்கையும் இல்லைதான்.
இருப்பினும் கர்ப்பங்களுக்கு இடையில் இடைவெளி விட்டு, தாய் – சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கும் முன்னுரிமை அளிக்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் ஒரு பெண் தன்னுடைய பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, எத்தனை குழந்தைகளை தன்னாலும் தன் இணையராலும் மகிழ்ச்சியாக வளர்க்க முடியும் என்பதை உணர்ந்து திட்டமிட்டு குழந்தை பெற்றெடுப்பதே ஆரோக்கியமான வழிமுறை.

