இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் கடற்படை தளபதி அலிரேசா தங்சிரியும் மூத்த கடற்படை அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயாத்துலா அலி காமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பல்களில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு எரிபொருள் மட்டும் எல்பிஜி ஏரிவாயவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் 48 மணி நேரத்தில் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஈரானில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கெடு விதித்தார். ஆனால் ஈரானிடம் இருந்து எந்த பதிலும் வராததால், பின்னர் ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது 5 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் கடற்படை தளபதி அலிரேசா தங்சிரியும் அவருடன் மூத்த கடற்படை அதிகாரிகளும் கொல்லப்பட்டு விட்டனர் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் இன்று (மார்ச் 23) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காட்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஈரானின் கடற்படை தளபதி அலிரேசா தங்சிரியை இஸ்ரேல் ராணுவம் அழித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கடல்வழி போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தியதிலும், பயங்கரவாதிகளை இயக்குவதிலும் முக்கிய பங்கு வகித்தவர் அலிரேசா தங்சிரி.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கு உதவியாக, இந்த செய்தியை எங்கள் அமெரிக்க கூட்டாளிக்கு தெரிவிக்கிறோம். ஈரானின் உயர் ராணுவ அதிகாரிகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்ற தெளிவான செய்தியை இந்த சம்பவம் உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடரந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவிலும், “ஈரான் ராணுவ அதிகாரிகளை ஒவ்வொருவராக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் வேட்டையாடும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஈரான் கடற்படை தளபதி அலிரேசா தங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு ஈரான் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.

