ஐபிஎல் 2026 தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
உலகளவில் பிரபல கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 19வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் 12 நகரங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. 5 மாநில தேர்தலை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரின் முதற்கட்ட 20 போட்டிகளுக்கான அட்டவணை முதலில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து இத்தொடரின் மீதமுள்ள 50 போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. பிளே ஆஃப் சுற்று போட்டிக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனின் இரண்டாம் கட்ட போட்டிகள் பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், தர்மசாலா, ராய்ப்பூர், மற்றும் நியூ சண்டிகர் ஆகிய 12 நகரங்களில் நடைபெற உள்ளன.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பு 14 போட்டிகளில் விளையாடும். அப்போட்டிகளில் இருந்து 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் நாளை மறுநாள் (மார்ச் 28) தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. மே 24ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
போட்டிகள் நடைபெறும் தினங்களில் 8 நாட்கள் தலா இரண்டு போட்டிகள் (double header) நடைபெறும் வகையில் ஐபிஎல் இரண்டாம் கட்ட அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடக்க விழாவை ரத்து செய்த பிசிசிஐ – காரணம் என்ன?
அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் 4 போட்டிகளிலும், ஆர்சிபி அணி பெங்களூரு மைதானத்தில் 3 போட்டிகளிலும், ராய்ப்பூரில் உள்ள மைதானத்தில் 2 போட்டிகளிலும் விளையாடுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சீசன் முழுவதும் 7 போட்டிகளில் விளையாடுகிறது.

