நம்முடைய அன்றாட பணிகளில் மிக இயல்பாக ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, எதிர்பாராத ஒரு தருணத்தில் நம் கைகள் லேசாக நடுங்குவதை கவனித்திருப்போம். ஒரு முக்கியமான மேடையில் மைக் பிடிக்கும்போதோ, அலுவலகத்தில் ஒரு கோப்பில் கையெழுத்திடும்போதோ அல்லது ஒரு தேநீர் கோப்பையை எடுக்கும்போதோ ஏற்படும் அந்த நடுக்கம், நம் மனதிற்குள் ஒருவித பதற்றத்தையும், சங்கடத்தையும் விதைத்து விடுகிறது.
“நமக்கு ஏன் இப்படி நடக்கிறது? இது ஏதோ நரம்பு பாதிப்பா?” என்ற பயம் சட்டென்று நம்மை தொற்றி கொள்கிறது. இன்றைய சூழலில், நாம் உணவிற்கும் ஓய்விற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக, நம் நரம்புகளுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்போது, அவை தங்களின் சோர்வை இது போன்ற நடுக்கங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றன.
சரியான நேரத்தில் இந்த சிக்னல்களை புரிந்து கொண்டு செயல்பட்டால், பயத்தை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை தொடர முடியும். அந்த வகையில், கை நடுக்கத்திற்கு பின்னால் இருக்கும் 3 வைட்டமின் குறைபாடுகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண்போம்.
வைட்டமின் B12: கை நடுக்கத்திற்கு மிக முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக இருப்பது வைட்டமின் B12 குறைபாடுதான். நம் உடலின் டி.என்.ஏ (DNA) உற்பத்திக்கும், நரம்பு செல்களை ஆரோக்கியமாக வைப்பதற்கும் இந்த வைட்டமின் மிக அவசியம். ஒரு மின்சார கம்பியின் மேல் இருக்கும் பிளாஸ்டிக் உறை எப்படி பாதுகாப்பளிக்கிறதோ, அதேபோல நம் நரம்புகளை சுற்றி ‘மயலின்’ எனும் பாதுகாப்பு உறை இருக்கும்.
B12 குறையும் போது இந்த உறை பாதிக்கப்படுகிறது. இதனால் மூளையிலிருந்து கைகளுக்கு செல்லும் சிக்னல்கள் சீராக இருக்காது. இதன் விளைவாகவே கைகளில் நடுக்கம், ஊசி குத்துவது போன்ற உணர்வு மற்றும் மதமதப்பு ஏற்படுகிறது என Sperling Medical Group தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு இந்த குறைபாடு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இறைச்சி, முட்டை மற்றும் பால் சார்ந்த உணவுகளில் இது அதிகமுள்ளது.
வைட்டமின் B6: வைட்டமின் B6 அல்லது ‘பைரிடாக்சின்’ என்பது நம் மூளை மற்றும் நரம்புகள் தடையின்றி இயங்குவதற்கு தேவையான ஒரு வேதிப்பொருள். இது நரம்புகளுக்கு இடையே தகவல்கள் பரிமாறப்படுவதை முறைப்படுத்துகிறது. இந்த குறைபாடு ஏற்படும்போது, ஒருவருக்கு தேவையற்ற எரிச்சல், மனச்சோர்வு மற்றும் கை நடுக்கம் ஏற்படலாம்.
இங்கு கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், B6 குறைவாக இருந்தாலும் நடுக்கம் வரும், அதே சமயம் அளவுக்கு அதிகமாக (சப்ளிமெண்ட் மாத்திரைகள் மூலம்) எடுத்து கொண்டாலும் நரம்பு பாதிப்பை உண்டாக்கும். எனவே, இதை உணவின் மூலம் பெறுவதே சிறந்தது. வாழைப்பழம், மீன், கோழி இறைச்சி மற்றும் தானியங்கள் போன்றவற்றில் இது இயற்கையாகவே நிறைந்துள்ளது.
குறிப்பாக நீண்ட காலம் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த தயமின் குறைபாடு ‘வெர்னிக் என்செபலோபதி’ (Wernicke’s encephalopathy) போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பாதாம் போன்ற கொட்டை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.
தவிர்க்க என்ன செய்யலாம்?
நமக்கு தெரியாமலேயே நம் வாழ்க்கை முறையில் செய்யும் சில மாற்றங்கள் நரம்புகளை பாதிக்கின்றன. கை நடுக்கம் ஏற்பட்டால் உடனே பயப்பட தேவையில்லை. முதலில் ஒரு ரத்த பரிசோதனை செய்து எந்த வைட்டமின் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான உணவுமுறை அல்லது வைட்டமின் மாத்திரைகளை எடுத்து கொண்டால், சில வாரங்களிலேயே இந்த நடுக்கம் மறைந்துவிடும். ஆரோக்கியமான நரம்பு மண்டலமே சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு அடிப்படை. எனவே, சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது அவசியம்.

