மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் தொடர்வதாகக் கூறி அந்த பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “லூப் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள், உணவகங்கள் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ள இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மீண்டும் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

