தேர்தல் நேரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழ்ச்சி அரசியல் மக்களிடம் எடுபடாது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக அகில இந்திய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “25 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மேற்காசிய போரால் உலகமே கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை கப்பல்களில் கொண்டு வரும் கடல் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், உலகம் எங்கும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன.
ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று உயர்ந்துள்ளது. ஈரான் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உரையாடி வருகிறார். பிரதமர் மோடி மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகளால் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் சுமார் 30 கோடி குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றுள்ளன. அதில், சுமார் 20 கோடி இணைப்புகள், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழங்கப்பட்டவை. வீடுகளுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு வந்து விடக்கூடாது. குறிப்பாக குடும்பத் தலைவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, மேற்காசிய போர் நெருக்கடியையையும் பிரதமர் மோடி எதிர்கொள்வார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். எனவே, இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்பட வேண்டாம். வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மோடி அரசு மீட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரப்பியவர்களின் முகத்திரை இரண்டு நாட்களில் கிழிந்ததை நாட்டு மக்கள் அறிவர். சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக்கவே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில், மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது. அதனால், எந்த நெருக்கடியையும் இந்தியா சமாளிக்கும். எனவே, தேர்தல் நேரத்தில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழச்சி அரசியல், மக்களிடம் எடுபடாது” என்று அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

