தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தந்தை – மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாம்கட்டமாக கூடுதலாக 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக விசாரணை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரிடம் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட பிற நபர்களிடம் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில் இறுதித் தீர்ப்பினை நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.
அவர் தமது தீர்ப்பை வாசித்தபோது,”உயிரிழந்த ஜெயராஜிற்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய் தொற்று காரணமாக அவர்கள் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே அவர்களது இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் கூறியுள்ளனர். இது கொலை என தீர்மானிக்கப் படுகிறது. தடய அறிவியல் ஆய்வும் இதனைக் கூறுகிறது” எனக் குறிப்பிட்டார்.
எனவே, குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் இந்த வழக்கின் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரன், இவர்களுக்கான தண்டனை குறித்த விபரங்கள் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் பின்னணி:
கரோனா பெருந்தொற்று ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 2020 ஜூன் மாதம் 19ஆம் தேதி, சாத்தான்குளம் பகுதியில் இரவு நேரத்தில் மொபைல் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி ஜெயராஜ் (58) மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) உள்ளிட்டோரை விசாரணைக்காக சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் அவர்களை போலீசார் கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஜூன் 20 ஆம் தேதி, தந்தை – மகன் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் காரணமாக ஜூன் 22 ஆம் தேதி மாலை பென்னிக்ஸிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி அதிகாலை ஜெயராஜும் மருத்துமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், காவல் துறையில் நிலவும் காவல் மரணங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எற்றது. இந்த கொடூர கொலை சம்பவத்தின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர், காவல் நிலையத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் இது மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
மேலும், இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.எஸ்.ஐ பால்துரை, உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன் உள்ளிட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்ததால், தற்போது வழக்கில் எஞ்சிய 9 காவலர்கள் மீதான வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமர்வில் நடைபெற்று வந்தது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன்னிலையில், சுமார் ஆறு ஆண்டுகளாக இந்த விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, பல்வேறு ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தந்தை-மகன் இருவரும் காவல் துறையினரால் மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டதே அவர்களின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

