இந்தியாவில் செயல்படும் ஆர்எஸ்எஸ் மற்றும் ரா உளவு அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு அந்நாட்டு மத சுதந்திர அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்காவில் இயங்கி வரும் “அமெரிக்க சர்வதேச மத உரிமைகளுக்கான ஆணையம்” (USCIRF) என்ற அமைப்பு, உலக நாடுகளில் மத சுதந்திரம் மீறப்படுகிறதா என்பதை ஆராய்ந்து, அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி வருகிறது.
அந்த ஆணையம், அமெரிக்க அரசுக்கு வழங்கிய 2026ஆம் ஆண்டின் பரிந்துரை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “உலக அளவில் மத சுதந்திரம் மீறப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. ஒரு நாட்டில் திட்டமிட்டு மத சுதந்திரம் மீறப்பட்டாலோ அல்லது மத சுதந்திர மீறல்களை அரசு அனுமதித்தாலோ அந்த நாட்டை “குறிப்பிட்ட பிரச்சனைக்குரிய நாடு” என்று அமெரிக்கா குறிப்பிடுகிறது. எனவே, அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், “இந்தியாவில் மத சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறையும், அமெரிக்காவின் சர்வதேச மத உரிமைகளுக்கான ஆணையமும் நேரில் சென்று ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு இந்திய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் தர வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“இந்தியாவில் மத சுதந்திரம் பறிக்கப்படுவதில் ஆளும் பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், இந்திய அரசின் ரா உளவு அமைப்புக்கும் முக்கிய பங்கு உள்ளது; எனவே, அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத சுதந்திரம் மேம்படுவதற்கு எதிர்காலத்தில் இந்தியா உடனான இரு தரப்பு வர்த்தகக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையையும் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமெரிக்கர்களும், மத சிறுபான்மையினரும் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாலும், அச்சுறுத்தப்படுவதாலும் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத சிறுபான்மையினர் மீதான உரிமை மீறல்களுக்காக இந்திய அரசுக்கு எதிராக அமெரிக்காவில் போராடுவதற்கு வழிவகை செய்யும் 2024ஆம் ஆண்டின் மசோதாவை அமெரிக்க அரசு மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

