ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலுள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வெளி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் (காபூல் நேரப்படி) ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 250-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொடூர சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தானின் செய்தி தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “காபூலில் உள்ள மருத்துவமனையின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 2000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை முற்றிலும் சேதமடைந்திருக்கிறது. இந்த தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது. மேலும் 250 பேர் காயமடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியாளர்களும் மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீயை கட்டுப்படுத்தவும், இறந்தவர்களின் உடல்களை மீட்கவும் அவசரகால குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காபூலில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் விபத்து குறித்த காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளன.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரு தரப்பினரும் தங்கள் எல்லைகளில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதில் ஆப்கானை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தான் கொடூரங்களை அரங்கேற்ற மருத்துவமனைகளையும், பொதுமக்கள் வசிக்கிற இடங்களையும் குறி வைப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் மருத்துவமனையில் கொல்லப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் அப்பாவி பொதுமக்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செயலை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காபூலில் எந்த மருத்துவமனை மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானின் ராணுவ தளங்களை மட்டுமே தாங்கள் குறி வைத்து வான்வெளி தாக்குதலை நடத்தியதாகவும், பொதுமக்கள் இருக்கும் இடங்களை குறி வைக்கவில்லை என்று கூறியுள்ள பாகிஸ்தான், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிராகரித்திருக்கிறது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வெளி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியது. இதனால் பிப்ரவரி மாத இறுதியில் இரு நாடுகளிடையே மீண்டும் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் அப்பாவி பொதுமக்களே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

