ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சூர்யா.இவர் நேற்றிரவு ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் மது போதையில் சீருடையுடன் நுழைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீற முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், காவலர் சூர்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சூர்யாவை தனது செல்போனில் வீடியோ எடுத்த அந்த பெண், வீட்டை விட்டு வெளியே வந்து கதவை பூட்டியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து அப்பெண்ணின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு மதுபோதையில் இருந்த காவலர் சூர்யாவை அவர்கள் பிடித்து வைத்தனர். மேலும், இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசாரிடம் அவர்கள் சூர்யாவை ஒப்படைத்தனர். இதையடுத்து, காவலர் சூர்யாவிடம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து, சூர்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்ததாக புகார் வந்ததன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு காவலர் சூர்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் வழங்கிய வீடியோவை ஆய்வு செய்த போது, அதில் அவர் அந்த பெண்ணிடம் அத்துமீறுவது போன்ற காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். காவலர் சூர்யா மீது தவறு இருக்கும் பட்சத்தில், அவர் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவலர் ஒருவரே பெண்ணிடம் அத்துமீற முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், காவலர் சூர்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

